பெங்களூரு, நவ. 24-

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு, மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கே ‘ஆப்பு’ வைத்து விட்டது.

தனது சகோதரர் உடல்நலக்குறைவால் இறந்துவிட, பில் கட்டும்போது பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து பிணத்தை எடுக்க அனுமதி மறுத்துவிட்டது. இதனையடுத்து அமைச்சர் சதானந்தகவுடா காசோலை கொடுத்த பின் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் டி.வி. சதானந்த கவுடாவின் இளைய சகோதரர் டி.வி. பாஸ்கர்(வயது56). இவர் மஞ்சள் காமாலை நோயால், மங்களூருவில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் பாஸ்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இதையடுத்து, அமைச்சர் சதானந்த கவுடா, சகோதரர் குடும்பத்தினர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்கான ரூ. 48 ஆயிரம் பணத்தை செலுத்தச் சென்றனர். அந்த ரூபாய் நோட்டுகள் முழுவதும் ரூ.500, ரூ1000 நோட்டுக்களாக இருந்ததால், அதை மருத்துவமனை நிர்வாகம் வாங்க மறுத்துவிட்டது.

இதனால், மத்திய அமைச்சர் சதானாந்தாகவுடாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளிடம், மத்திய அரசின் அறிவிப்பு படி, மருத்துவமனைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெறமுடியாது என்று எழுதிக்கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

ஆனால், கொஞ்சமும் சட்டை செய்யாத மருத்துவமனை நிர்வாகத்தினர் பழைய ரூபாய் நோட்டுகளை பெறமுடியாது என்று எழுதிக்கொடுத்துவிட்டனர். இதையடுத்து, அமைச்சர் சதானந்த கவுடா காசோலை அளித்தபின், சகோதரரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் கொண்டு செல்ல அனுமதித்தது.

இது குறித்து மருத்துவமனை தலைமைநிர்வாக அதிகாரி சித்திக் கூறுகையில், “ எங்களுடைய மருத்துவமனை அதிகாரிகள் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க முடியாது என்று அமைச்சர் சதானந்த கவுடாவிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக எழுதியும் கொடுத்து, மத்திய அரசின் விதிமுறைகளை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்றும் தெரிவித்தனர். அதன் பின், காசோலையாக கொடுத்தனர்'' எனத் தெரிவித்தார்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று அமைச்சரின் தனிச்செயலாளர் மஞ்சுநாத் கென்யாடி மறுத்துள்ளார்.