பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான 6 மணிநேரத்தில், 15 டன் தங்கம், தங்க நகைகள் விற்பனையாகியுள்ளன என இந்திய தங்கம் மற்றும் நகைகள் விற்பனை அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அறிவிப்பு
நாட்டில் கள்ள நோட்டையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கும் வகையில், பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ1000 நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பை கடந்த மாதம் 8-ந்தேதி இரவு 8மணிக்கு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கருப்பு பணம் பதுக்கியிருப்போர், நகைகக் கடைகளில் தாங்கள் வைத்திருக்கும் பணத்துக்கு தங்க கட்டிகளாகவும், நகைகளாகவும் வாங்கிக் குவித்தனர்.
அதிகாலை விற்பனை
மும்பை, உத்தரப்பிரதேசம், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஏறக்குறைய இரவு 8 மணியில் இருந்து 9-ந்தேதி அதிகாலை 2 மணி வரை விற்பனை நடந்துள்ளது. இந்த 6 மணி நேரத்தில் 15டன் தங்க கட்டிகள், நகைகள் விற்பனையாகியுள்ளன என தெரியவந்துள்ளது.
15 டன் தங்கம்
இது குறித்து ‘இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லரி அசோஷியேசன்’ தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், “ எங்கள் அமைப்பில் நாடுமுழுவதும் 2500 உறுப்பினர்கள் உள்ளனர். பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி இரவு 8 மணிக்கு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்புக்குப் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 15 டன் தங்கக்கட்டிகள், நகைகளை விற்பனை செய்துள்ளனர். ஏறக்குறைய இந்த விற்பனை நவம்பர் 8-ந்தேதி இரவு 8 மணியில் இருந்து 9-ந்தேதிஅதிகாலை 2 மணி வரை, அதாவது 6 மணி நேரத்தில் நடந்துள்ளது. இந்த விற்பனையில் பாதிக்கு மேல் டெல்லி, உத்தரப்பிரதேசம், மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடந்துள்ளது.
6 மணிநேரம்
ஏறக்குறைய நாடுமுழுவதும் 6 லட்சம் தங்க நகை விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். இதில் மிகக்குறைவாக ஆயிரம் வர்த்தகர்கள் மட்டுமே, நவம்பர் 8-ந்தேதி அன்று ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிகமாக வாங்கிக்கொண்டு தங்க நகைகளை விற்பனை செய்துள்ளனர். ஏறக்குறைய ஒருமாதம் விற்பனையை 6 மணிநேரத்தில் நடத்தி முடித்துள்ளனர்.
சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட அந்த ஆயிரம் வர்த்தகர்கள் மீது மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் '' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 7 முதல் 9ந்தேதி வரையிலான விற்பனை விவரங்களை தாக்கல் செய்யக்கோரி, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் நகரில் ஏறக்குறைய 650 நகைக்கடை உரிமையாளர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
