ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதிக்கொள்கை குழு தனது 2-து நிதிக்கொள்கை அறிவிப்பில் கடனுக்கான வட்டியை மாற்றம் செய்யாமல் நேற்று அறிவித்தது. இதையடுத்து, குறுகியகால கடனுக்கான வட்டி 6.25 சதவீதமாகத் தொடர்கிறது.

நிதிக்கொள்கை

ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிதியாண்டின் 5-வது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.

புதிய முறை

ரிசர்வ் வங்கி, மத்தியஅரசு சார்பில் அமைக்கப்பட்ட புதிய குழுவில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், துணை கவர்னர் ஆர்.காந்தி மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் மைக்கேல் பாத்ரா ஆகியோரும், மத்திய அரசு சார்பில் இந்திய புள்ளியியல் கழகத்தின் பேராசிரியர் சேதன் கதே, டெல்லி பொருளாதார கல்லூரியின் இயக்குநர்பாமி துவா மற்றும் ஐ.ஐ.எம். அகமதாபாத் பேராசிரியர் ரவீந்திர தோலகியா ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழு தனது 2-வது அறிக்கையை நேற்று வெளியிட்டது. 

மாற்றமில்லை

கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட நிதிக்குழு ஆய்வறிக்கையில் யாரும் எதிர்பாரா வகையில் 0.25 சதவீதம் வட்டிக்குறைப்பு இருந்தது. ஆனால், இந்த முறை வட்டிவீதம் குறைக்கப்படவில்லை

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, கடனுக்கான வட்டியான ரெப்போ ரேட் 6.25 சதவீதமாகத் தொடர்கிறது. வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி பெறும் கடன், வைப்புத்தொகைக்கான வட்டி( ரிவர்ஸ் ரெப்போ ரேட் ) 5.75 சதவீதமாகவும் தொடர்ந்து மாற்றமில்லாமல் நீடிக்கிறது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் குறித்து அறிவிப்பு இல்லை என்பதால், ஏற்கனவே இருந்த 4 சதவீதமாக நீடிக்கிறது.

வளர்ச்சி குறைப்பு

இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் மூலம், நவம்பர், டிசம்பர் மாதத்தில் நாட்டில் பெரும்பாலான தொழில்துறை நடவடிக்கைகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் பாதித்துள்ளது. நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதில் தாமதம், மூலப்பொருட்கள் வாங்குவதில் சிரமம் உள்ளிட்ட பல இடையூறுகள் ஏற்பட்டதால் வளர்ச்சி 7.6 சதவீதத்தில் இருந்து 7.1 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சேவைத்துறையான ஓட்டல், கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, தகவல்தொடர்பு, ஆகியவற்றில் பழைய ரூபாய் நோட்டு தடை தடையால் தற்காலிகமாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ரூ.12 லட்சம் கோடி

மத்தியஅரசு ரூ.1000, ரூ.500 நோட்டுகளை தடை செய்தபின், நாட்டில் புழக்கத்தில் இருந்து ரூ.14.50 லட்சம் கோடியில், இதுவரை வங்கிகளுக்கு ரூ.12 லட்சம் கோடி டெபாசிட்டாக வந்துள்ளது. வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை 100 சதவீதம் உயர்த்தி இருப்பதால், டொபாசிட்களை வங்கிகள் வசூலித்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், மார்ச் மாதம் வரையிலான பணவீக்க இலக்கு 5 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.