உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவைச் சேர்ந்த பேக்கரி கடைக்காரர், ரூ.40 லட்சத்துக்கு சில்லரை காசுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்ய முயன்றார். அதற்கு வங்கிகள் மறுப்பு தெரிவிக்கவே, நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றார்.
லக்னோ நகரில் பிரட், கேக் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவர் சந்தீப் அபுஜா. இவர் லக்னோ நகரில் உள்ள அயிஸ்பாஷ் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி, மற்றும் ஹூசைன்கான்ஜ் பகுதியில் உள்ளஅலாகாபாத் வங்கியிலும் கணக்கு வைத்துள்ளார்.
தனது வியாபாரத்தில் கிடைத்த ரூ. 40 லட்சம் சில்லறை காசுகளை இரு வங்கியிலும் சந்தீப் அபுஜா டெபாசிட் செய்ய முடிவு செய்தார். அவரிடம் ரூ. ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் காசுகளாக ரூ. 40 லட்சத்துக்கு இருந்தன.

இந்த ரூ.40 லட்சம் சில்லறை இரு வங்கிகளில் டெபாசிட் செய்ய சந்தீப் பல முறை முயன்றார். ஆனால், வங்கி அதிகாரிகள் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, லக்னோ உயர்நீதிமன்றத்தில், சந்தீப் மனு தாக்கல் செய்தார். ஸ்டேட் வங்கி , அலகாபாத் வங்கியிலும் கணக்கு வைத்துள்ள நான், ரூ. 40 லட்சத்துக்கு சில்லறை காசுகளாக டெபாசிட் செய்ய முயன்றபோது அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்த காசுகளை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி திலிப் பாபா சாகேப் போஸ்லே, நீதிபதி ராஜன் ராய் ஆகியோர் நேற்று முன் தினம் விசாரித்தனர். அப்போது வங்கிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூபாய் நோட்டு அறிவிப்பால் இப்போது கடினமான வேலை பளு இருக்கிறது, ஆதலால், சில்லறை காசுகளாக டெபாசிட்டை ஏற்றுக்கொள்வது கடினம் என்றனர்.
இதையடுத்து, நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜனவரி 1-ந் தேதிக்கு பிறகு நாள்தோறும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை, நாள்தோறும் ரூ. 5 ஆயிரம் அளவுக்கு சில்லறை காசுகளாக சந்தீப் டெபாசிட்செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.
