ரூ.1000, ரூ.500 செல்லாது மத்திய அரசு அறிவித்து ஒருவாரமாகி, பழைய நோட்டுக்களை திரும்பப் பெற்று வரும் நிலையில், டெல்லி நகரமக்களின் நிலை சொல்லிமாளாது.
சில்லறை தட்டுப்பாட்டால், டெல்லி வாழ் மக்கள் ஆட்டோவிலும், அரசு பஸ்ஸிலும் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படி பயணித்தாலும், சில்லறை இல்லாமல் புதிய ரூபாய் நோட்டைக் கொடுத்து, நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

நாட்டில் உள்ள கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்க, புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர்மோடி அறிவித்தார். 10-ந்தேதியில் இருந்து மக்கள் தங்களிடமுள்ள செல்லாத ரூபாய்நோட்டுக்களை வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் மாற்றி வருகின்றனர். ஆனாலும், கூட்டம் குறைந்தபாடில்லை. ஏ.டி.எம். மையங்களும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராததால் மக்கள் வங்கிகளின் வாசல்களையே நம்பி இருக்கிறார்கள்.
டெல்லியில் உள்ள மதர்டெய்ரி மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் அரசு அலுவலங்களில் இம்மாதம் 24-ந்தேதி வரை பழைரூபாய் நோட்டுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என அரசு அறிவித்தது. இதையொட்டி, மக்கள் தங்களிடமுள்ள பணத்தைக் கொண்டு, பொருட்களை மொத்தமாக கொள்முதல்செய்ய இங்குள்ள அரசு கூட்டுறவு, மதர்டெய்ரி கடைகளில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
இது குறித்து ரோகினி பகுதியில் வசிக்கும் தேபாஜோதி கூறுகையில், “ கடந்த வாரம் ரூ. 4 ஆயிரம் வங்கியில் பெற்றேன். அதை வீட்டு மளிகைப்பொருட்கள்வாங்க செலவு செய்துவிட்டேன். இப்போது எனக்கு ஆட்டோவுக்குகூட சில்லறையில்லை. அதனால், ஒரு ஆட்டோவை எனக்கு வாடகைக்கு அமர்த்தி தினமும் அலுவலகத்துக்கு சென்று வருகிறேன். எப்போது எனக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்கிறதோ அப்போது வாடகைப்பணம் தருகிறேன் எனக் கூறிவிட்டேன்'' எனத் தெரிவித்தார்.

சில்லறை பிரச்சினையால் கடைகளில் வியாபாரம் கடுமையாகப் பாதித்துள்ளது என்று சிறுவியாபரிகள் புலம்புகின்றனர். தெற்குடெல்லி, பெர் சாரை பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் ராம் கிஷன் கூறுகையில், “ மொத்த கடையில் கொள்முதல் செய்யவதற்கு யாரிடமும் பணம் இல்லை. இதனால் பணப்பரிமாற்றமும் நடக்கவில்லை. ஆட்டோவுக்கு கூட காசோலை கொடுக்க முடியுமா?, இணையதளம் மூலம் பரிமாற்றம் செய்யமுடியுமா? '' என புலம்பினார்.
டெல்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்த ராஜ்வதி கூறுகையில்,“ நான் எனது குடும்பத்தாரின் துணிகளை சலவை செய்வோரிடம் கூட கடன் சொல்லி கணக்கு வைக்க வேண்டி இருக்கிறது. மளிகை கடையிலும் கடன் சொல்லி, பொருட்களை வாங்கி வருகிறேன். பணம் இருந்தாலும் நல்ல ரூபாய் நோட்டாக மாற்ற முடியாததால், கடன் சொல்லியே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஓடுகிறது. எப்போது இது தீரும் எனத் தெரியவில்லை'' எநத் தெரிவித்தார்.
