டெல்லியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றிய இளம்பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. நள்ளிரவு என்பதால் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனையறிந்த 5-வது மாடியில் குடியிருந்த ஸ்வாதி கார்க்(32) என்ற பெண், சாதுரியமாக செயல்பட்டு அந்த குடியிருப்பில் இருந்தவர்களின் வீட்டை தட்டி அனைவரையும் எழுப்பினார். இதனால், அவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்கு சென்று உயிர் தப்பினர். இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அருகில் உள்ள நகரில் இருந்து 45 நிமிடங்களுக்கு பின் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் ஸ்வாதி மாடிக்கு வரவில்லை. இதனையடுத்து தீ அணைப்பில் ஈடுபட்டிருந்த வீரர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த பெண்ணை தேடிய தீயணைப்பு வீரர்கள் அப்போது, 10-வது மாடியில் பூட்டப்பட்ட கதவுக்கு அருகே ஸ்வாதி இறந்த நிலையில் இருந்தார். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் குடியிருப்போர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.