டெல்லியில் பெண் நிருபர் மீது மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 

டெல்லியில் உள்ள நொய்டாவை சேர்ந்தவர் மிதாலி சந்தோலா. தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக பணியாற்றி வருகிறார். இவர், வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென மிதாலி காரின் மீது முட்டையை வீசியுள்ளனர். உடனே அவர் தனது காரை நிறுத்தியுள்ளார். 

இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காரை நோக்கி இரண்டு முறை சுட்டனர். இதில் ஒரு குண்டு மிதாலியின் வலது கையில் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மிதாலி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.