பெரா வழக்கில் ஆஜராகாத விஜய் மல்லையா டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் இல்லையென்றால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை. 

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். 

இதனிடையே கிங்பி‌ஷர் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்த 2 லட்சம் டாலர் தொகை ரிசர்வ் வங்கி முன் அனுமதி பெறாமல் கை மாறியது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பெரா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. 

இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் பல தடவை வலியுறுத்தியும் விசாரணைக்கு மல்லையா வரவில்லை. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மல்லையா டிசம்பர் 18ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் இல்லையெனில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்றும் உத்தரவிட்டுள்ளார்.