ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்தவர் அமித் குமார். டெல்லி பாரத் நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றிவந்தார். 32 வயதான அவருக்கு மனைவியும் 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில், அமித் குமாருக்கு காய்ச்சல் அடித்ததால் அவர் மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனாலும் காய்ச்சல் நிற்கவில்லை. அதன்பின்னர் காய்ச்சல் அதிகரித்ததுடன் மூச்சு விடவும் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடன் இருந்த சக காவலர்கள் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறை சார்பில் வாகனம் கூட ஏற்பாடு செய்துதரவில்லை என்று கூறியுள்ளனர் அவரது சக காவலர்கள். 

அதனால் வேறு ஏதோ ஒரு காரை எடுத்துக்கொண்டு முதலில், ஜஹாங்கிர்புரியில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, தனிமை வார்டு இல்லையென்று கூறி, அமித் குமாரை அட்மிட் செய்து சிகிச்சையளிக்க மறுத்துள்ளனர். இதையடுத்து தீப் சந்த் பந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கும், அமித் குமாருக்கு சில மருந்துகளை மட்டும் கொடுத்துவிட்டு தனிமை வார்டுக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

இதையடுத்து மறுபடியும் அங்கிருந்து ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அமித் குமார் உயிரிழந்தார். அவரது பரிசோதனை முடிவு நேற்று வெளிவந்ததில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானது. ஒரு மருத்துவமனையில் கூட அமித்தை அட்மிட் செய்து சிகிச்சையளிக்கவில்லை. அப்படி சிகிச்சையளித்திருந்தால் அமித் உயிருடன் இருந்திருப்பார். ஒவ்வொரு மருத்துவமனைக்கு செல்லும்போதும் அமித்தின் மனைவிக்கு தகவல் கொடுத்துக்கொண்டுதான் சென்றோம். இப்போது அமித்தின் மனைவிக்கு என்ன ஆறுதல் சொல்லப்போகிறோம் என்று தெரியவில்லை என்று கூறி வருந்தும் சக காவலர்கள், இக்கட்டான சூழலில் மூத்த அதிகாரிகள் உதவவில்லை என அமித் குமாருடன் பணியாற்றிய சக காவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உயரதிகாரிகள், அமித் குமாரின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவல்துறை செய்து கொடுக்கும் என்று உறுதியளித்துள்ளனர். 

 

அமித் குமாரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை இழப்பீடாக வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.