டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும் வகையில் அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளதால் தொண்டர்கள் உற்சாகத்தில் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 21 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அனைத்து ஊடகங்களும் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டது. ஆனால், கருத்துகணிப்பை பாஜக தவிடுபோடியாக்கும் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது. 70 தொகுதிகளில் 53 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக மீண்டும் அரியணையில் ஏற உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 52.01 சதவீதமும், பாஜக 40.02 சதவீதமும், காங்கிரஸ் 4.45 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றப்பட உள்ள நிலையில் தலைமையகத்தை பலூன்களை பறிக்கவிட்டு வருகின்றனர். தோல்வியால் துவண்டு போயிலுள்ள பாஜக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.