லண்டனில் இருந்து நேற்றிரவு டெல்லி வந்த 266 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பரவிய வைரசை விட அதிக வீரியமிக்கதாக உருமாறி, 70 சதவீதம் வேகமாக பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் அதிகமான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. மத்திய அரசும் இங்கிலாந்துக்கான விமான சேவையை இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 11.59 வரை இந்தியா வர தடை விதித்துள்ளது. இந்நிலையில், லண்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லண்டனில் இருந்து நேற்றிரவு டெல்லி வந்த 266 பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்த போது அதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், உருமாறிய கொரோனாவா என சோதிக்க மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.