எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஓமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துவிட்டது. உண்மையான பாதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதனிடையே தலைநகர் டெல்லியில் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் சுமார் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவமனையிலேயே பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று மட்டும் 4,099 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேபோல பாசிட்டிவ் விகிதமும் 6.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். அதன்படி, வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரையிலான முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள், கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில், விடுமுறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) குறைந்தது 50 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மருத்துவர்களும் ஜனவரி 5 முதல் ஜனவரி 10 ம் தேதி வரை வழங்கப்பட்ட குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டு, உடனடியாக மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை தவிர, சஃப்தர்ஜங் மருத்துவமனையிலும் 23 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த மருத்துவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் வீட்டிலையே தங்களை தாங்களே தனிமை படுத்திக்கொண்டனர் என்று சஃப்தர்ஜங் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், டெல்லியில் மோசமடைந்து வரும் கொரோனா பரவல் நிலைமையை ஆய்வு செய்ய டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தை கூட்டியுள்ளது. மேலும், தொற்று நோய்களின் பரவலை கட்டுப்படுத்த ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.