லக்னோ, நவ. 24-
உத்தரப்பிரதேசத்தில் 3 வயது குழந்தை சிகிச்சைக்காக பணம் எடுக்க வங்கியில் நீண்டவரிசையில் தந்தை காத்திருந்ததால், அந்த குழந்தை இறந்தது.
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை வெளியாகி 15 நாட்களில் இந்த அறிவிப்புக்கு நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
கூலித்தொழிலாளி
பந்தா மாவட்டம், தின்ட்வாரி நகரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. கூலித் தொழிலாளியான இவர் நகரில் உள்ள உத்தரப்பிரதேச கிராமீன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவரின் 3-வயது மகள் அங்கீதாவுக்கு திங்கள்கிழமையன்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, உடல் பலவீனமடைந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது தர்மேந்திரா கையில் பணம் இல்லை.
வரிசை
இதையடுத்து, கிராமீன் வங்கிக்கு சென்று ரூ.2500 பணம் எடுக்க, தனது மகளை தூக்கி சென்றார். தனது மகளை தோளில் சுமந்து வங்கியில் வரிசையில், தர்மேந்திரா நின்றுள்ளார். இவரின் நிலையைப் பார்த்த மக்கள் முன்னே சென்று பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிதாபப்பட்டு கூறினர்.
பரிதாபம்
அதை ஏற்று தர்மேந்திரா முன்னே சென்று வாங்க முயன்றபோது, வங்கி மேலாளர் அவருக்கு பணம் அளிக்க மறுத்துவிட்டார். அதன்பின் தனது மகளின் உடல்நிலை மோசமடையவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வங்கியில் இருந்து கீழே இறங்கியபோது, அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது. இதைக் கண்ட தர்மேந்திரா கண்ணீர்விட்டு அழுதார்.
தனது மகளின் இறப்புக்கு வங்கி மேலாளர்தான் காரணம் என பந்தா மாவட்ட போலீஸ் சூப்ரென்டு ஸ்ரீபதி மிஸ்ராவிடம் தர்மேந்திரா புகார் அளித்துள்ளார்.
மாணவர் தற்கொலை...
பந்தா மாவட்டம், மவாய் புஜூர்க் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பிரஜாபதி(வயது19). இவர் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்துவருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வங்கியில் ரூ.30 ஆயிரத்துக்கு பழைய ரூபாய் நோட்டுகளைடெபாசிட் செய்துவிட்டு, உடனடியாக ரூ.10 ஆயிரம் எடுக்க பிரஜாபதி முயன்றார். ஆனால், பிரஜாபதிக்கு பணம் இல்லை என வங்கியில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், திங்கள்கிழமையும் வரிசையில் நின்று பணம் எடுக்க முயன்றும் பணம் இல்லை என வங்கி மேலாளர் தெரிவித்தார். 23-ந்தேதி கல்லூரி தேர்வுக்கு பணம் செலுத்த இறுதிநாள் என்பதால், வங்கி மேலாளரிடம், பிரஜாபதியும், அவரின் தந்தை லாலு ராமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மீண்டும் பணம் எடுக்கச்சென்றும் பிரஜாபதிக்கு பணம் கிடைக்காததால், கடும் விரக்தியில் இருந்தார். மனமுடைந்த நிலையில், வீட்டுக்கு வந்த பிரஜாபதி, தனது அறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
