Asianet News TamilAsianet News Tamil

அசாமை புரட்டிப்போட்ட கனமழை... வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!!

அசாமில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 

death count raised to 24 who died in assam rain and flood
Author
Assam, First Published May 23, 2022, 10:54 AM IST

அசாமில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அசாமில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நடப்பு ஆண்டில் முதன்முறையாக பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்திற்கு மொத்தம் 32 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி 3 ஆயிரத்து 246 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நகாவன் மாவட்டம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. 2.88 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

death count raised to 24 who died in assam rain and flood

திசாங், பராக் மற்றும் குஷியாரா ஆகிய ஆறுகளிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடியது. வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுவ படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நியூ கஞ்ஜங், பியாங்புய், மவுல்ஹோய், நம்ஜேஉராங், தெற்கு பகிதர், மகாதேவ் தில்லா, காளிபாரி, வடக்கு பகிதர், ஜியான் மற்றும் லோடி பங்மவுல் கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் 1,00,732.43 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன.

death count raised to 24 who died in assam rain and flood

மொத்தம் 499 நிவாரண முகாம்கள் மற்றும் 519 நிவாரண வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 92 ஆயிரத்து 124 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தகவல் தொடர்பு முடக்கப்பட்ட நிலையில், தற்போது அவை மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. லும்டிங்-பதர்பூர் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், நிலச்சரிவுகளாலும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் சேதம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மலைப்பாதையில் ரயில் சேவை ஒரு வாரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. அசாமின் அனைத்துப் பகுதிகளிலும் அணைகள், சாலைகள், பாலங்கள், வீடுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios