கர்பிணிகளுக்காகவும், பாலூட்டும் தாய்மார்களுக்காகவும் கர்நாடக அரசு கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தில் தலித் பிரிவினர் சமைத்த உணவுகளை சாப்பிட பெண்கள் மறுத்து வருகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் ஆழமாக வேறூன்றியுள்ள சாதி முறையால், இந்த திட்டத்தில் சமைக்கப்பட்ட ஏராளமான உணவுகள் கீழே கொட்டப்படுகின்றன.

மதிய உணவு திட்டம்

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்களுக்கும் 6 மாதங்களுக்கு இலவச சரிவிகித சத்துணவு(மதிய உணவு) அளிக்கும் ‘மாத்ரூ பூர்ணா’ திட்டத்தை கர்நாடக அரசு சமீபத்தில் செயல்படுத்தியது.

இந்த திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் உணவுகளை சமைத்து கர்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்களுக்கும் அளித்து வருகிறார்கள்.

தலித் பிரிவு

இந்நிலையில், சிக்கபலபூர் மாவட்டத்தில் 1,961 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 350 அங்கன்வாடிகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரைச் சேர்ந்த பெண்கள் சமையல் செய்து வருகிறார்கள். இவர்கள் சமையல் செய்யும் அங்கன்வாடிகளில் சமைக்கப்படும் உணவுகளைப் பெற உயர் சாதி பெண்கள் வருவதில்லை என புகார் கூறப்படுகிறது.

குப்பையில் உணவுகள்

இதனால், நாள்தோறும் சமைக்கப்படும் உணவுகள் வீணாக குப்பையில் கொட்டப்படுகிறது. இதனால், அங்கன்வாடி பணியாளர்கள் சமைப்பதை நிறுத்தியுள்ளனர்.

யாரும் வாங்கவில்லை

இது குறித்து சிக்ககாடேஹெகனஹல்லி அங்கன்வாடி மையத்தின் பணியாளர் ரேனுகாகூறுகையில், “ எங்கள் அங்கன்வாடி மையத்தில் கர்பிணிகள், பாலூட்டும் பெண்கள் என 15 பயனாளிகளுக்கான உணவு தயாரிக்கிறோம். நானும் எனது உதவியாளரும் தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள். நாங்கள் சமைத்த உணவுகளை பெற ஊரில் உள்ள பெண்கள்  யாரும் வருவதில்லை. மாலை வரை காத்திருந்தும் ஒருவரும் வரவில்லை. இதை கிராம பஞ்சாயத்தாரிடம் கூறிவிட்டு உணவுகளை குப்பையில் கொட்டினோம்’’ என்றார்.

 ஸ்ரீராமபுரா கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கூறுகையில், “ தலித் பிரிவு அல்லாத மற்ற சாதியைச் சேர்ந்த பெண்கள் உணவு சமைத்தால் மட்டுமே அங்கன்வாடிக்கு சென்று உணவு வாங்குவோம் என்று பெண்கள் கூறிவிட்டதாக’’ தெரிவித்தார்.