சமாஜ்வாதி கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தை கைப்பற்றுவதில், முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங்குக்கும் இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது. இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் நேற்று 4½ மணிநேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சைக்கிள் சின்னம் யாருக்கு எனும் முடிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

வரும் 17-ந்தேதிக்கு முன்பாக சின்னம் யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவக்கின்றன.

கட்சியில் பிளவு

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங், முதல்வரும் முலாயமின் மகனுமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது.  இரு தரப்பினரும் கட்சியும், சின்னமும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் முறையிட்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரின் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.

வாக்குவாதம்

இந்நிலையில், டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம் முன் நேற்று இருதரப்பினரும் ஆஜரானார்கள். முதல்வர் அகிலேஷ் தரப்பில் காங்கிரஸ் மூத்ததலைவர் கபில் சிபல், ராஜீவ்தவான் ஆகியோர் ஆஜரானார்கள்.  எம்பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் அகிலேஷ் பக்கம்தான் இருக்கிறார்கள். எனவே கட்சியும், சின்னமும் அகிலேஷ் யாதவ் தரப்பினருக்கே உரியது என்று கபில் சிபல் வாதிட்டார்.

முலாயம்சிங், அவரின் சகோதரர் சிவபால் யாதவ், எம்.பி. நரேஷ் அகர்வால் ஆகியோர் வந்திருந்தனர். இருதரப்பினருக்கும் ஏறக்குறைய நான்கரை மணிநேரம் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

செல்லாது

சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னால் சொலிசிட்டர் ஜெனருமான மோகன் பராசுரன் ஆஜரானார். அவர் வாதிடுகையில், “ கட்சியை உருவாக்கிய முலாயம்சிங்கை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கி புதிய தலைவரை தேர்ந்து எடுத்தது செல்லாது. அப்படி ஒரு எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. அவரது தேர்வு கட்சி விதிகளுக்கு எதிரானது'' என்றார்.

51சதவீதம் ஆதரவு

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் கூறுகையில், “ சமாஜ்வாதி கட்சியின் எம்பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு என்று கையொப்பம் இட்டு பிரமாணப்பத்திரத்தை இரு தரப்பினரும் அளிக்க வேண்டும். இதில் 51 சதவீத ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் கட்சியை உரிமை கொண்டாட முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

16-ந்தேதிக்குள்

உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 11ந் தேதி நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் வரும் 17ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக அதாவது 16ந் தேதியே, சைக்கிள்  சின்னம் யாருக்கு என்ற சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், இரு தரப்பினரும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாமல், தனித்தனி சின்னத்தில்தான் போட்டியிட முடியும்.