சொத்து மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அதைப் பயன்படுத்தி அதிகாரிகளின் லஞ்ச முறைகேடுகளைக் கண்டுபிடிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சௌத்ரி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,  ஒரு அலுவலரின் பணப் பரிவர்த்தனை, அசையாச் சொத்து விற்பனை உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள், வருமான வரித் துறை, பத்திரப்பதிவுத் துறை, நிதிப் புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளிடம் உள்ளன. இந்த நிலையில், பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒரு அலுவலர் அல்லது அதிகாரியின் ஆதார் எண் மற்றும் அவரது வருமான வரி கணக்கு எண் (பான் நம்பர்) ஆகியவற்றைப் பயன்படுத்தி, அவரது பணப் பரிவர்த்தனை விவரங்களை எளிதில் கண்டறிய முடியும். அந்த விவரங்களை வைத்து அவரது வரவு, செலவு, முதலீடு ஆகியவற்றைக் கணக்கிட முடியும். மேலும், அவரது நிதி பரிவர்த்தனை மற்றும் அசையாச் சொத்து பரிவர்த்தனை ஆகியவை அவரது வருமானத்துடன் பொருந்துகிறதா? என்பதையும் எளிதில் கணக்கிட முடியும். அதன் மூலம், அவர் லஞ்ச ஊழலில் ஈடுபட்டாரா என்பதை கண்டறிந்து விடலாம்.

இதுபோன்ற விவரங்கள் இதற்கு முன்பு சிபிஐக்கு எளிதில் கிடைக்கவில்லை. எனவே, ஆதார் வழியில் லஞ்சம் வாங்கும் அலுவலர்களின் முறைகேடுகளைக் கண்டறிவதற்கான வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் விரைவில் பெறப்படும். மேலும், அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து அலுவலர்களின் பணப் பரிவர்த்தனை விவரங்களை எளிதில் பெறுவதற்கு கணினி மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இதன்மூலம் லஞ்ச ஊழலில் ஈடுபடும் அலுவலர்கள், அதிகாரிகளை எளிதில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.