மத்தியஅரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், பணத்தட்டுப்பாடு தலைவரித்து ஆடுவதால், கொதிப்படைந்த மக்கள், பல்வேறு மாநிலங்களில் வங்கிகளை அடித்து, நொறுக்கிவரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.களிலும் மக்கள் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து.

மத்தியஅரசின் உத்தரவு வெளியாகி 40 நாட்கள் ஆகியும், இன்னும் மக்கள் தேவைக்கு ஏற்றார் போல், வங்கியில் உள்ள சேமிப்பையும், ஏ.டி.எம்.களில் பணத்தையும் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

வங்கிமுன் வரிசையில் காத்துக்கிடந்து பணம் எடுக்க உள்ள செல்லும் போது பணம் கையிருப்பில் இல்லை எனக் கூறும் போது மக்கள் ஆத்திரத்தில் வங்கி அதிகாரிகளையும், வங்கியின் பொருட்களையும் அடித்து, நொறுக்கும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில்நடந்து வருகின்றன.

கல்வீச்சு

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர் நகர் மாவட்டம், காக்ரோலி கிராமத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில் நேற்று முன் தினம் மக்கள் பணம் எடுக்கச் சென்றனர். ஆனால், வங்கி மேலாளர் சந்திர மோகன் பணம் கையிருப்பில் இல்லை என மக்களிடம் தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள், வங்கியின் மீது கற்களை வீசி தாக்கியும், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து வங்கியின் மேலாளர் சந்திர மோகன் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீஸ் ஆய்வாளர் ஆனந்த் மிஸ்ரா அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தர்ணா போராட்டம்

இதேபோல ஷாம்லி மாவட்டம், பதேபூர் கிராமத்தில் உத்தரப்பிரதேச கிராம வங்கியில் பணம் எடுக்க மக்கள் நின்று இருந்தனர். அப்போது பணம் இல்லை என வங்கி நிர்வாகம் கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த மக்கள் வங்கியை அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றனர். மேலும்,சாஹாப்பூர்-காந்தலா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவும் செய்தனர். அதன்பின் போலீசார் தலையிட்டு, மக்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.

சாலை மறியல்

மேலும், ஷாம்லா மாவட்டம், ஜலதாபாத் நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் இல்லை என்ற அறிவிப்பைக் கேட்ட மக்கள், டெல்லி-சஹாரான்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது. அதன்பின் போலீசார் மக்களிடம் சமாதானம் பேசி, போக்குவரத்தை சீர்செய்தனர்.

வன்முறை

குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மாநிலம், அம்ரேலி, சுரேந்திரா நகர் மாவட்டங்களில் வங்கிகளில் பணம் இல்லாமல் 3 நாட்களாக மூடிக்கிடக்கின்றன. இந்நிலையில் வங்கி நேற்று முன் தினம் காலையில் திறந்ததும் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் பணம் எடுப்பதற்காக திரண்டனர். ஆனால் வங்கிகளில் பணம் இல்லை என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

அவர்களுடன் பொது மக்களும், விவசாயிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீர் என்று விவசாயிகள் வங்கிகளின் ஜன்னல் கதவுகளை அடித்து நொறுக்கி சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

யூனியன் பிரதேசமான தாத்ரா தாகர் ஹவேலியின் தலைநகர் சில்வஸ்ஸா நகரில் உள்ள பெரும்பாலான வங்கிகளிலும் பணம் இல்லை. இதனால் மக்கள் வங்கி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று வங்கி அதிகாரிகளை மீட்டனர்.