criminals lifetime ban in elections

குற்றப்பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏக்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

சிறை தண்டனை பெற்றவர்கள் மற்றும் குற்றப்பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, குற்றப்பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏக்களின் பட்டியலை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

அதில், சிறை தண்டனை அனுபவித்தவர்கள், கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற அதிதீவிர குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குற்றப்பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட தடை விதித்தால்தான் அரசியலில் குற்றங்களை தடுக்க முடியும் என்பதால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.