பசு குண்டர்களை எந்த வகையிலும் காப்பாற்றக்கூடாது….மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

நாட்டில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்து செயல்படும் பசு குண்டர்களை எந்த வகையிலும் பாதுகாக்க கூடாது  மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடுமைாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மத்தியில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசு குண்டர்கள், மாட்டிறைச்சி வைத்து இருப்போர், பசுக்களை வாகனங்களில் கொண்டு செல்லும் முஸ்லிம்கள், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் எஸ். பூனாவாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொது நலமனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில்,“ பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்து செயல்படும் பசு குண்டர்களையும், பசு பாதுகாப்பு அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார். 

மேலும், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பசு பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 7-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் பசு தாக்குதல் குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அவர்கள் தாக்கல் செய்யவில்லை

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம். கான்வாலிகர், எம்.எம். சந்தான கவுடர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதாடினார், அவர் கூறுகையில், “ சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுகளுக்கு உட்பட்டது. இதில் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் பங்கு இல்லை. சட்டவிதிகளின்படி, நாட்டில் பசு குண்டர்களுக்கு இந்த நாட்டில் இடமில்ைல என்பது மத்திய அரசி கருத்து. தனிமனிதர்கள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு அரசு ஒருபோதும் ஆதரவு அளிக்காது’’ என்றார்.

மேலும், 6 மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பசு குண்டர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள் ஏ.எம். கான்வாலிகர், எம்.எம். சந்தான கவுடர் பிறப்பித்த உத்தரவில்,“ சட்டம் ஒழுங்கை பராமரிப்பது என்பது மாநில அரசு கடமை என்று மத்திய அரசு கூறுகிறது என்று கூறுகிறீர்கள். ஆதலால், மாநில அரசுகள் இனி நடவடிக்கை எடுக்கும். இதில் எந்தவிதமான பசு குண்டர்களையும் மத்திய அரசு பாதுகாக்க கூடாது.

ேமலும், சமூக ஊடகங்களில் இருக்கும் பசு குண்டர்கள் தாக்குதல் தொடர்பானவீடியோக்களை அழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அடுத்த 4 வாரங்களில் பசு தாக்குதல் குறித்தும், அதை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்க தாக்கல் செய்ய வேண்டும். வழக்கை செப்டம்பர் 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம்’’ எனத் தெரிவித்தனர்.