திருமணமான 5 நாட்களில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, திருமணத்தில் பங்கேற்ற ஒரு வயது குழந்தை உள்பட 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் டவுனை சேர்ந்தவர் 26 வயது வாலிபர். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 25-ம் தேதி அந்த வாலிபருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவருக்கு  சளி, ரத்தம் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து புதுமாப்பிள்ளைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 5-வது நாளில் புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உயிரிழந்த புதுமாப்பிள்ளையின் குடும்பத்தை சேர்ந்த இரண்டு முதியவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலம் ஒரு வயது குழந்தை, 8 சிறுவர்-சிறுமிகள் உள்பட மொத்தம் 70 பேர் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளனர்.