இங்கிலாந்தில் இருந்து வந்த ஆந்திர பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து  தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் உள்ள தமது கணவரை சந்தித்து விட்டு விமானம் மூலம் டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால், யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பி, ஏபி எக்ஸ்பிரஸ் மூலம் ஆந்திராவுக்கு சென்றடைந்தார்.

இதனையடுத்து, ஆந்திர மாநிலச் சுகாதாரத் துறைக்கும், காவல்துறைக்கும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்த ஆந்திர சுகாதார துறையினர், அந்த பெண்ணை தேடி பிடித்து விசாரணை செய்து, அவருடைய குடும்பத்தாருடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தினர். மேலும், அந்த பெண் பயணம் செய்த ரயில் பெட்டியில் யார் யாரெல்லாம் உடன் பயணித்தனர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

அவரது மாதிரிகள் புனேவின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கு (என்.ஐ.வி) அனுப்பப்பட்டன. அந்தப் பெண் பழைய அல்லது உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த, என்.ஐ.வி.யின் அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.