சென்னையை போல பெங்களூருவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்த வரிசையில் பெங்களூரு மட்டும் தப்பிப் பிழைத்து அங்கு பரவல் கட்டுக்குள் இருந்தது. இதற்கிடையில் சமீபத்தில் அங்கு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. முன்னதாக நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கில் பதிவான பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை கடந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசியமான தேவைகள் தவிர வேறு எதற்கும் அனுமதி வழங்கவில்லை. 

இந்நிலையில், தான் கடந்த சில நாட்களாக பெங்களூருவில் வசிக்கும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கிச் செல்கின்றனர். பெங்களூருவில் அதிகரித்து வரும் கொரோனா பயத்தினாலும் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டு வரும் முழுமையான ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற அச்சத்திலும் நகரத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் ஊர்களுக்குக் கிளம்பியுள்ளனர். பெங்களூருவிலிருந்து வெளியில் செல்லும் மக்களால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவும் அச்சம் இருப்பதால் மக்கள் யாரும் பெங்களூருவை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.