கொரானோ அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று தேவஸ்தானம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. 

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு 3700-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்தனர். இந்தியாவில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக மக்கள் பயணங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களைத் தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொந்தரவு உள்ள பக்தர்கள் திருமலைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். பக்தர்கள் தங்களின் பயணத் திட்டங்களைச் சில மாதங்களுக்கோ சில வாரங்களுக்கோ தள்ளி வைத்து பிறகு வரலாம் என்றும் கூறியுள்ளனர்.

திருப்பதி, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடம் என்பதால், ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால், இதைத் தவிர்ப்பதற்காக இந்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யச் செல்லும் வரிசைகளை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டாலும், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.