இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மொத்தம் 11,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 


இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 24 மணிநேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர், 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்னை 11,439 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் தங்கி 9,756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 1,305 பேர் குணமடைந்துள்ளனர்.


இந்தியாவில் மாநிலம் வாரியாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது மகாராஷ்டிர மாநிலத்தில் மோசமான வகையில் பாதிப்பும், உயிரிழப்பும் இருந்து வருகிறது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 178 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில்18 பேர் உயிரிழந்துள்ளனர்.


அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக இருந்த நிலையில் நேற்று ஒரு நாளில் 7 பேர் உயிரிழந்ததால் 50 ஆக அதிகரித்துள்ளது. மூன்றாவதாக குஜராத்தில் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று 2 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப், தமிழகத்தில் தலா 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.