ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை மகாராஷ்டிராவில் 1895க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் தாராவியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. தாராவியில் வசிக்கும் 7.5 லட்சம் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் முழுவீச்சில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், அப்பகுதி  முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.