இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62லிருந்து 68ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை அலறவிட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 
ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 2,902ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை62லிருந்து 68ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் 411 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. மேலும் டெல்லியில் 386 பேரும், கேரளாவில் 295 பேரும், ராஜஸ்தானில் 179 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 174 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.