இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் கொரோனாவுக்கு 2,023 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130ஆக அதிகரித்துள்ளது. . தொடர்ந்து 7வது நாளாக கொரோனா தொற்று 2 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 2,023 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,82,553ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 21,57,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 13,01,19,310 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவதில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. நேற்று மட்டும் புதிதாக 62,097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் இதுவரை 39.6 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் 519 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஐசிஎம்ஆர் அறிக்கையில்;- ஒரே நாளில் 16,39,357 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 27,10,53,392 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.