ஹரியானாவின் சுகாதார அமைச்சரான அனில் விஜ், பாரத் பயோடெக்கின் கோவேக்சினின் மூன்றாம் கட்ட சோதனையின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தடுப்பூசியினை எடுத்துக் கொண்டார். கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிக்கு தனது மாநிலத்தில் முதல் தன்னார்வலராக இருப்பார் என்று அவர் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தற்போது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அம்பாலாவில் உள்ள அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன். தன்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். அனில் எடுத்துக்கொண்ட கோவேக்சின் தடுப்பு மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்தத் தடுப்பு மருந்து தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.


தற்போது ஐ.சி.எம்.ஆர். உடன் இணைந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், தடுப்பு மருந்தை 26,000 பேருக்கு செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்தான் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. எனவே, கோவாக்ஸின் தடுப்பு மருந்து மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
"கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை என்பது மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட வேண்டும். இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட 14 நாட்கள் கழித்துதான் கொரோனாவை கோவேக்ஸின் கட்டுபடுத்துகிறதா, அதன் செயல்திறன் எப்படிப்பட்டது என்பது தீர்மானிக்கப்படும்” என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.