உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும் மூன்றாவது இடத்தில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 62.14 லட்சம் பேரும், பிரேசிலில் 39.10 லட்சம் பேரும், இந்தியாவில் 37.33 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்தியாவில் கடந்த ஜூலை 31 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,38,870 ஆக இருந்தது. ஆகஸ்ட் 31 அன்று இந்த எண்ணிக்கை 36 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அதாவது, ஒரே மாதத்தில் இந்தியாவில் கொரோனாவால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இந்தியாவில்தான் மிக அதிகமாக பதிவாகியுள்ளனர். 
 ஜூலை முதல் வாரத்தில் தினசரி 15,000 என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் 61,700 என 4 மடங்காக அதிகரித்துள்ளது. அதே வேளையில் இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கையும் 77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் சுமார் 2 சதவீதமாக உள்ளது. நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களிலும் கொரோனா வைரஸ் பரவியதே இந்தியாவில் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் பரிசோதனைகள் இந்தியாவில் அதிகரித்துள்ளதும் ஒரு காரணமாகும். இந்தியாவில் இதுவரை 4.33 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.