திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைாக நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைடுத்து, ஊரடங்கு காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 83 நாட்களாக பக்தர்களுக்கான சாமி தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டததையடுத்து தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் கடந்த மாதம் 8ம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். 

அதன்பிறகு, அனைத்து பக்தர்களுக்கும் தரிசன செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்யைில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்குள் பணியாற்றும் ஒரு அர்ச்சகருக்கும், 5 பாதுகாவலர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தேவஸ்தானம் சார்பில் நாளை அவசர ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை முடிவில் மீண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலை தற்காலிகமாக மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.