Asianet News TamilAsianet News Tamil

கோரமண்டல் ரயில் விபத்து: இதுவரை நடந்தது என்ன?

பாலாசூர் (ஒடிசா): ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coromandel express accident all you need to know what happened
Author
First Published Jun 3, 2023, 12:03 PM IST

ஒடிசா மாநிலம்  பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே  இரண்டு பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் நேற்றிரவு 7.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாலும், தடம் புரண்ட பெட்டிகளில் மேலும் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ரயில்வே, மத்திய, மாநில பேரிடர் படைகள் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து நடந்தது என்ன?
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே  சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.  அந்த பெட்டிகள் மீட்கப்பட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அந்த சமயத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு, முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்பு பணிகள் தீவிரம்
ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் விபத்துள்ளான சமயம் இரவு நேரம் என்பதாலும், வனப்பகுதியில் விபத்து ஏற்பட்டதாலும் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவலறிந்த ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், விபத்து நடந்த இடத்துக்கு வருவாய் துறை அமைச்சர், ஒடிசாவின் சிறப்பு நிவாரணத்துறை செயலாளர் சத்யபிரதா சாஹூ, உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார். தென் கிழக்கு ரயில்வேயின் விபத்து மீட்பு ரயில்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ரயில்வே, தீயணைப்பு படையினர், மத்திய, மாநில பேரிடர் படைகளும் சம்பவ இடத்துக்கு அனுப்பி  வைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவசரகால பணிகளில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, விபத்து நடந்த இடத்தில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆதரவு சேவைகளுடன் இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளைப்பிரிவு சார்பில், ராணுவ மருத்துவ மற்றும் பொறியியல் குழுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் மீட்பு படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உதவி எண்கள் அறிவிப்பு
ரயில் விபத்து தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் ரயில்வே சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

ஒடிசா மாநில அரசின் உதவி எண்: 06782-262286
ஹவுரா உதவி எண்: 033-26382217
காரக்பூர் உதவி எண்கள்: 897207395, 9332392339
பாலசோர் உதவி எண்: 8249591559, 7978418322
ஷாலிமர் உதவி எண்: 9903370746
பத்ரக் உதவி எண்: 8455889900
ஜெய்பூர் கெனோஜ்ஹர் சாலை உதவி எண்: 8455889906
கட்டாக் உதவி எண்: 8455889917
புவனேஸ்வர் உதவி எண்: 8455889922
குர்தா சாலை: 6370108046
பிராஹ்மபூர் உதவி எண்: 89173887241
பலூகோன் உதவி எண்: 9937732169
பாலசா உதவி எண்: 8978881006

தென்மேற்கு ரயில்வே உதவி எண்கள்
பெங்களூரு: 080-22356409
பங்காரபேட்: 08153 255253
குப்பம்: 8431403419
சர் மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா முனையம்: 09606005129
கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம்: 88612 03980

தமிழ்நாடு அரசு உதவி எண்கள்
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களையும் 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவித்துள்ளது. மேலும், 6782 262 286, 6782 262 286 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள் இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ, ஐரோப்பிய யூனியன் தலைவர், குடியரசுத் தலைவர் திரவுபாதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளதாகவும், தனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளதாகவும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள அவர், விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சுதந்திரமான விசாரணை
ஒடிசா, பாலசோரில் விபத்து நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 3 ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும், ரயில் விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இழப்பீடு அறிவிப்பு
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதவிர, மாநில அரசுகளின் சார்பிலும் நிவாரணத்தொகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஒடிசா ரயில் விபத்து: தமிழர்களின் நிலை என்ன?
விபத்துக்குள்ளான இரண்டு பயணிகள் ரயில்களும் தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்புள்ளது. சென்னை வரவிருந்த கோரமண்டல் விரைவு ரயிலில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் சென்னை வர முன்பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன், ரயில் விபத்து தொடர்பாக தொலைபேசியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு செய்யும் என உறுதி அளித்துள்ளார். தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒடிசா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவும் ஒடிசா சென்றுள்ளது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக வரும் செய்திகள் வருத்தம் அளிப்பதாகவும், சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்ட பின்னர் தகவல் தெரிவிப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், மீட்பு பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனாவிடம் காணொலி காட்சி மூலமும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் திரும்பி சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதவி சேவை மையத்தை தொடர்பு கொண்டு சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதவிர, ஒடிசா ரயில் விபத்தையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று ஒருநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாளான இன்று, அவரது சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த திமுக தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது. அவரது பிறந்தநாளையொட்டி இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் திமுக அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios