காங்கிரஸ் கட்சியில் உள்ள எல்லா தலைவர்களும் ஜெயிலுக்கு போவது நிச்சயம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான சுப்பிரமணிய சாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

குஜாரத் தேர்தலில், நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக முயற்சி செய்தோம். அகமது பட்டேல் எங்களுக்கு எதிரி. அதனால், அவரை தோற்கடிக்கவே நாங்கள் கடுமையாக முயற்சித்தோம்.

காங்கிரசை தோற்கடிக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அதற்காகவே, நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லோரும் ஜெயிலுக்கு போகப்போவது உறுதி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பெயில் வாங்கி கொண்டு வெளியே இருக்கிறார்கள். ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பி செல்ல முயன்றார். அதனால், அவரை தேடப்படுபவர் என அறிவித்துள்ளோம்.

இன்னும் காங்கிரசில் அமைச்சராக இருந்தவர்கள் எல்லோரும் ஜெயிலுக்கு போவார்கள். இது விரைவில் நடக்கும்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி எப்படி நடக்கிறது என்று என்னிடம் கேட்டால், நான் என்ன சொல்வது. நான் இங்கேயேவா இருக்கிறேன். பொதுவாக சொல்ல வேண்டும் என்றாலும், 35 மாநிலங்களையும் நான் பார்த்து கொண்டே இருக்க முடியாது.

ஒரு மாதம் முழுவதும் தமிழகத்தில் இருந்து பார்த்தால்தான், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.