Asianet News TamilAsianet News Tamil

ஐந்து மாநில தேர்தல்: இன்று கூடும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

ஐந்து மாநிலத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது

Congress Working Committee meet today five state poll strategy top agenda smp
Author
First Published Oct 9, 2023, 11:20 AM IST

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடியவுள்ளது. இதையடுத்து, அம்மாநிலங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று கூடுகிறது. காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ள இந்த கூட்டத்தில் ஐந்து மாநில தேர்தல், சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

மறுசீரமைக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த நிலையில், இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், மத்தியப்பிரதேசத்தில் பாஜகவிடமும், தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதியிடம் இருந்தும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியிடம் இருந்தும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது.

சட்டத்தின் ஆட்சி: ஜஸ்டின் ட்ரூடோ பதிவால் புதிய சர்ச்சை!

எனவே, இந்த கூட்டத்தில் ஐந்து மாநிலத் தேர்தல் உத்திகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சி உறுதியளித்துள்ளது. ஆனால், சாதி வாரி கணக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக சாடி வரும் நிலையில், இதுகுறித்தும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர்கள் மற்றும் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களாக 39 பேரும், நிரந்தர அழைப்பாளர்களாக 32 பேரும், சிறப்பு அழைப்பாளர்களாக 13 பேரும் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios