காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவி பர்கா சுக்லா சிங் இன்று பாரதியஜனதா கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவுடன், தான் எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை எனத் தெரிவித்து இருந்த, பர்கா சுக்லா சிங், பா.ஜனதாவில் இணைந்த சில மணி நேரங்களில் பிரதமர் மோடியின் கொள்கைகளையும், புகழையும் பாடத் தொடங்கினார்.

டெல்லி மகளிர் அணி தலைவராக இருப்பவர் பர்கா சுக்லா சிங். இவர் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ஆகியோர் மீது நேற்று அடுக்கடுக்கான புகார்களை வெளியிட்டு பேட்டி அளித்தார். அதில் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கட்சியை வழிநடத்த மனதளவில் தகுதியில்லாத நபர்.

அஜய் மகான் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார். கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராகுல் காந்தி இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்” எனத் தெரிவித்தார். இதையடுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூடி, பர்கா சுக்லா சிங்கை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என்று கூறிய பர்கா சுக்லா சிங் இன்று பாரதியஜனதா கட்சியில் இணைந்தார். பா.ஜனதாவில் இணைந்த பர்சகா சுக்லா சிங்கை, தேசியத் துணைத் தலைவர், டெல்லி பா.ஜனதா தலைவர் ஆகியோர் வரவேற்றனர்.

பா.ஜனதாவில் இணைந்த பின், பர்கா சுக்லா சிங் நிருபர்களிடம் பேசுகையில், “ நான் பா.ஜனதாவில் சேர்ந்தது தேர்தலில் போட்டியிடவும் இல்லை, எந்த பதவிக்கும் ஆசைப்பட்டு சேரவில்லை. ஆனால், கடுமையாக உழைத்து எனக்கு கொடுக்கும் பணிகளைச் செய்வேன்.

கடந்த 3 ஆண்டுகளாக நாட்டில் பிரதமர் மோடி செய்துவரும் சீர்திருத்தங்களை நான் பாராட்டி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, முத்தலாக் பிரச்சினை குறித்து பிரதமர்மோடிக்கு கடிதம் எழுதி, பெண்களை பாதுகாக்க கூறினேன். அவர் எனக்கு பதில் அளித்த விதம், எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது” என்று தெரிவித்தார்.