காங்கிரஸ் கட்சியை வழிநடத்த துணைத்தலைவர் ராகுல்காந்தி மனதளவில் தகுதியில்லாதவர் என்று விமர்சித்த டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவி பர்கா சுக்லா சிங்கை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி, கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லி மகளிர் அணி தலைவராக இருப்பவர் பர்கா சுக்லா சிங். இவர் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ஆகியோர் மீது நேற்று அடுக்கடுக்கான புகார்களை வெளியிட்டு பேட்டி அளித்தார்.

அதில் பர்கா சுக்லா சிங் கூறுகையில், “ கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர், யாரையும் பெயர் சொல்ல விரும்பவில்லை. துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கட்சியை வழிநடத்த மனதளவில் தகுதியில்லாத நபர்கள்.

காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக உழைத்து வருவதாக அஜய் மக்கான் கூறுகிறார். ஆனால்,  பெண்களிடம் இருந்து வாக்குகளை பெறுவதற்காகவே காங்கிரஸ் இப்படி கூறிவருகிறது.

அஜய் மக்கான் என்னிடமே தவறாக நடந்து கொள்ள முயன்றார். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இது குறித்து ராகுல்காந்தியிடம் தெரிவித்தால், செவிடர் போல் ஏதும் தெரியாமல் இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி கட்சிக்குள் எனக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவும்போது, பெண்களுக்கு இவர்கள் எப்படி அதிகாரம் அளிக்கப் போகிறார்கள்?.

மகளிர் காங்கிரஸ் தொண்டர்களின் பிரச்சினையில் ராகுல்காந்தி அக்கறை இல்லாமல் இருக்கிறார். நான் கேட்கும் கேள்வி எல்லாம் ஏன் ராகுல்காந்தி பயந்து ஒளிகிறார். சொந்த கட்சி தொண்டர்களைச் சந்திக்கவே ஏன் அவர் தயங்குகிறார்” என்று பேசி இருந்தார்.

மேலும், டெல்லி மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல்காந்தியை விமர்சனம் செய்தது கட்சிக்குள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,டெல்லியில் நேற்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் பர்க்கா சுக்லா சிங்கை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

டெல்லி மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைமை மீது கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியில் இருந்து வெளியேறிய 2-வது நிர்வாகி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

டெல்லி காங்கிரஸ் தலைவர் லவ்லி சிங் என்பவர் அடிப்படை உறுப்பினர் உள்பட தனது அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்துவிட்டு சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.