காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வெளிநாடு செல்லும்போது கூட, இனிமேல் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பாதுகாப்புப் பிரிவினரை வர வேண்டாம் எனத் தடுக்க முடியாத வகையில் விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.

ராகுல் காந்தி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவருக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், உடன் செல்லும் வகையில் சிறப்பு பாதுகாப்பு அளிக்கும் படைப்பிரிவின் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றாலும் ராகுல் காந்தியுடன் சிறப்பு பாதுகாப்புப் படையினர் உடன் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராகுலைச் சுற்றி இனி எஸ்பிஜி பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவர்கள் வெளிநாடுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் செல்லும்போது, டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தோடு எஸ்பிஜி பிரிவினரை நிறுத்திவிட்டு, தனிப்பட்ட முறையில் செல்கிறார்கள். எஸ்பிஜி பிரிவினரையும் திருப்பி அனுப்பிவைத்து வந்தனர்.

இது குறித்து எஸ்பிஜி பிரிவினர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளனர். அதில் ராகுல் காந்தி குடும்பத்தார் வெளிநாட்டுக்கு தனிப்பட்ட ரீதியில் பயணம் செய்யும்போது எஸ்பிஜி பிரிவினரை உடன் செல்ல அனுமதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி அல்லது அவரின் குடும்பத்தினர் அலுவல் ரீதியாகவோ அல்லது மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறையிடம் முன் அறிவிப்பு செய்துவிட்டு சென்றால் மட்டுமே நாங்கள் அவர்களுடன் செல்ல அனுமதிக்கிறார்கள். இல்லாவிட்டால் எங்களை உடன் செல்ல அனுமதிப்பதில்லை எனப் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராகுல் காந்தி ஒருபோதும் தனிப்பட்ட முறையில் வெளிநாடு செல்லும்போது எஸ்பிஜி பிரிவினரை உடன் வர அனுமதிக்கமாட்டார். ஆனால், எஸ்பிஜி பிரிவினர் அதை எளிதாக எடுக்கமாட்டார்கள். ராகுல் காந்தி எங்கு செல்கிறாரோ அங்குள்ள இந்தியத் தூதரகத்துக்கு தகவலுக்கு மட்டும் தெரிவிக்கப்படும். 

சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றபோதுகூட எஸ்பிஜி பிரிவினரை அனுமதிக்கவில்லை. இருந்தபோதிலும், இந்தியத் தூதரகத்திடம் அவரின் பயணம் குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி தனது பயணம் முடித்து நாடு திரும்பும்போது, 25 நிமிடங்களுக்கு முன் எஸ்பிஜி பிரிவினர் விமான நிலையத்தில் இருக்குமாறு கூறிவிடுவார். அவர்கள் வந்து ராகுல் காந்தியை அழைத்துச் செல்வார்கள்" எனத் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ராகுல் காந்தி எஸ்பிஜி பிரிவினரை வரவிடாமல் தடுப்பது குறித்து கடந்த 2017-ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டு, 2018-ம் ஆண்டில் சில முக்கிய மாற்றங்கள் பாதுகாப்பு விதிகளில் செய்யப்பட்டுள்ளன. அதன்படி உயர் அச்சுறுத்தலில் இருப்பவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடன் எஸ்பிஜி பிரிவினர் உடன் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எஸ்பிஜி பிரிவினர் உடன் வருவார்கள்.

இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " இறுதியாக அனைத்து விதிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மாற்றம் குறித்தும், புதிய ஏற்பாடுகள் குறித்தும் ராகுல் காந்தி குடும்பத்தாரிடம் விளக்கம் அளித்து, தகவல் தெரிவித்துவிட்டோம்" எனத் தெரிவித்தார். மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தலுக்கு முன், ராகுல் காந்தி கம்போடியாவுக்கு திடீர் பயணமாக சென்றதையடுத்து, எஸ்பிஜி விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனிமேல் எப்போதும் எஸ்பிஜியின் பாதுகாப்பு வளையத்தில்தான் ராகுல் காந்தி இருப்பார். தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றாலும் எஸ்பிஜி பிரிவினரை வரவேண்டாம் என்று தடுக்க முடியாது.