தங்களது ராஜினாமா கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் -ம.ஜ.த எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். விடுமுறை முடிந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் நேற்று பேரவைக்கு திரும்பினார். ஆனால், எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால் ராஜினாமா கடிதங்கள் பரிசீலனை செய்யப்படும் என்று கூறியிருந்தார். 

இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில், மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்நிலையில், தங்களது ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தி காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அரசியலமைப்பு சட்டப்படி சபாநாயகர் தனது கடமையை செய்யவில்லை எனவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். வழக்கை விரைந்து விசாரிக்க கோரிய நிலையில் மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

 ஏற்கனவே, தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா என தமிழகத்தில் சார்பில் 2 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.