முஸ்லீம் லீக் ஆன காங்கிரஸ். காங்கிரஸ் ஆன பாஜக
“காங்கிரஸ் அற்ற பாரதம்” என்ற பாஜகவின் சுயநல அரசியல் கோஷத்தை துக்ளக் ஏற்றதில்லை, காங்கிரஸ் எவ்வளவு நலிந்தாலும் அதை நாம் ஏற்கப்போவதும் இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக தொடரும் காங்கிரசின் வீழ்ச்சி நாட்டுக்கு நல்லதல்ல, கவலைக்குரியது என்று கூறிவருகிறது துக்ளக். அதே சமயம் காங்கிரஸ் தன் தேசியம், கொள்கை, பண்புகளை தொடர்ந்து இழந்துவருவது அதைவிட ஆபத்தானது என்பதையும் 1969-ல் இந்திரா தனது குடும்ப நலத்துக்காக காங்கிரஸை உடைத்த காலத்திலிருந்தே நாம் கூறிவருகிறோம்.
நடப்பு தேர்தலில், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள், அது தொடர்ந்து காங்கிரஸ்-பாஜக இடையே நடக்கும் பொறிபறக்கும் விவாதங்கள் சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸுக்கும், முஸ்லீம் லீக் குக்கும் காங்கிரசுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கு இடையே நடந்த சர்ச்சைகளை நினைவுபடுத்துகின்றன. தேர்தல் விவாதங்களில் அன்றைய காங்கிரஸ் எதையெல்லாம் ஏற்றதோ அதையெல்லாம் இன்றைய காங்கிரஸ் எதிர்க்கிறது, எதையெல்லாம் அந்த காங்கிரஸ் எதிர்த்ததோ அதையெல்லாம் இன்றைய காங்கிரஸ் ஏற்கிறது என்ற – கவலைக்குரிய – நிலை வெளிப்படுகிறது. திடீரென்று இந்த நிலைக்கு சரியவில்லை காங்கிரஸ். அதற்கு ஒரு நீண்ட பின்னணி இருக்கிறது. அதை அறிந்தால் தான் இந்த தேர்தல் விவாதங்களின் காரணங்கள் விளங்கும், அதன் விளைவுகள் புரியும்.
சரிவின் தொடக்கம்
“காங்கிரஸ் அற்ற பாரதம்” என்ற பாஜகவின் சுயநல அரசியல் கோஷத்தை துக்ளக் ஏற்றதில்லை, காங்கிரஸ் எவ்வளவு நலிந்தாலும் அதை நாம் ஏற்கப்போவதும் இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக தொடரும் காங்கிரசின் வீழ்ச்சி நாட்டுக்கு நல்லதல்ல, கவலைக்குரியது என்று கூறிவருகிறது துக்ளக். அதே சமயம் காங்கிரஸ் தன் தேசியம், கொள்கை, பண்புகளை தொடர்ந்து இழந்துவருவது அதைவிட ஆபத்தானது என்பதையும் 1969-ல் இந்திரா தனது குடும்ப நலத்துக்காக காங்கிரஸை உடைத்த காலத்திலிருந்தே நாம் கூறிவருகிறோம். ஒரு காலத்தில் தேசியம் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் தேசியம் என்று இருந்தது. அந்த காங்கிரஸை இந்திரா அரசாங்க அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து காமராஜ், மொரார்ஜி, நிஜலிங்கப்பா போன்ற பழுத்த தேசியவாதிகளை அவமதித்து விலக்கி கைப்பற்றினார். காங்கிரஸை கைப்பற்ற காங்கிரசையும் தேசியத்தையும் எதிர்த்த திமுக, பாரத நாடே ஒன்றல்ல என்று கூறிவரும் கம்யுனிஸ்டுடன் கூட்டு சேர்ந்தார் அவர். அவர்களுடன் கூட்டணி வைத்து 1971 தேர்தலில் இந்திரா வெற்றிபெற, காங்கிரஸ் தன் தனிப்பட்ட பண்புகளை இழந்து தேசிய நீரோட்டத்திலிருந்தே தடம்புரளத் தொடங்கியது. 1969 காங்கிரஸ் பிளவை கடுமையாக எதிர்த்த துக்ளக் நிறுவன ஆசிரியர் சோ, துக்ளக் தொடங்கவே காங்கிரசின் வீழ்ச்சியும் திமுகவின் எழுச்சியும் தான் காரணம். காங்கிரஸ் அற்ற பாரதம் என்பதை ஏற்காத துக்ளக் இன்றைய காங்கிரஸை எதிர்க்கவும், மோடி தலைமை பாஜகவை ஆதரிக்கவும் என்ன காரணம் என்பதையும் இந்த தேர்தலில் காங்கிரஸ்-பாஜக இடையே நடக்கும் விவாதமே வெளிப்படுத்தும். 1980-களில் நேர்ந்த கொள்கை சரிவு காங்கிரஸை முஸ்லீம் லீக் போல ஆக்கத் தொடங்க இன்று அது முஸ்லிம் லீக் போலவே ஆகிவிட்டது. 1970களில் நேர்ந்த கொள்கை சரிவு அதை கம்யூனிஸ்டு போல ஆக்க, நடுவில் தாராளமயமாக்கல் பாதையில் சென்ற அது, 2024 தேர்தல் அறிக்கையில் மீண்டும் கம்யூனிஸ்டு போலவே ஆகியிருக்கிறது.
முஸ்லீம் லீக் ஆன காங்கிரஸ்
சுதந்திரத்துக்கு முன், முஸ்லிம்கள் தனி என்று கூறி முஸ்லிம்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு கேட்டது முஸ்லீம் லீக். அதற்கு மறைமுக ஆதரவளித்த பிரிட்டிஷ் அரசு வகுப்புவாத அடிப்படையில் இடஒதுக்கீடு திட்டம் கொண்டுவந்த போது அதை எதிர்த்து 1932-ல் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார் மகாத்மா காந்தி. பிறகு நாட்டை பிரிவினை செய்ய 1937-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் ஷரீஅத் சட்டம் கொண்டுவந்து முஸ்லிம்களை தனிப்படுத்தியது. அதனால் ஊக்குவிக்கப்பட்டு, 1940-ல் முஸ்லிம்கள் ஹிந்துக்களுடன் சேர்ந்து ஒரு நாட்டில், ஒரு அரசின் கீழ் வாழமுடியாது, அவர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டது முஸ்லீம் லீக். இல்லை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே விசாலமான சமூகத்தை சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் மதம் மாறினார்களே தவிர சமூகத்தை விட்டு விலகவில்லை, நாம் எல்லோரும் ஒன்றே என்று கூறியது காங்கிரஸ். இப்படி தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை உறுதியாக இணைத்து பேசியது அன்றைய காங்கிரஸ். அதற்கு நேர்மாறாக, அன்று முஸ்லீம் லீக் முஸ்லிம்களை எப்படி தனிப்படுத்திப் பேசியதோ, அப்படியே, அதே பாணியில், அதே வார்த்தைகளை பயன்படுத்திப் பேசுகிறது இன்றைய காங்கிரஸ். அன்று முஸ்லீம்கள் தனி என்று கூறியது முஸ்லீம் லீக். அன்று அதை எதிர்த்த காங்கிரஸ் இன்று முஸ்லிம்கள் தனி என்கிறது. முஸ்லிகளுக்கு தனி இட ஒதுக்கீடு கூடாது என்று எதிர்த்தது அன்றைய காங்கிரஸ். அதை அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசன சபையும் ஆமோதித்தது. இன்றைய காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என்று உறுதிமொழி கொடுக்கிறது. கர்நாடகா அரசு ஒட்டுமொத்த முஸ்லிம்களை ஓபிசி பிரிவில் சேர்த்து அவர்களுக்கு இட ஒத்துக்கிடு கொடுக்க, அதை நடைமுறை படுத்திவிட்டது இன்றைய காங்கிரஸ். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் அனைவரும் சமமான குடிமக்கள், ஷெட்யூல்ட் வகுப்பினரைத் தவிர யாருக்கும் எந்த முன்னுரிமையும் கிடையாது என்று கூறியது அன்றைய காங்கிரஸ். இல்லை நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முன்னுரிமை என்று கூறுகிறது இன்றைய காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஹிந்துக்களுக்குத் தான் முன்னுரிமை தரப்படுகிறது என்று அன்றைய காங்கிரஸுக்கு எதிராக, 1938-ல் பீர்பூர் கமிட்டி என்ற குழுவை அமைத்து அதன் அறிக்கையை பெற்று குற்றம் சாட்டியது முஸ்லீம் லீக் இன்றைய காங்கிரஸ் பாஜக முஸ்லீம் விரோதி என்று சாடுவது, அன்றைய முஸ்லீம் லீக் அன்றைய காங்கிரஸ் முஸ்லீம் விரோதி என்று கூறியதை எதிரொலிக்கிறது. 1986-ல் கணவனால் கைவிடப்பட்ட முஸ்லீம் பெண்களுக்கு மற்ற சமூகப் பெண்களுக்கு சட்டப்படி கிடைக்கும் ஜீவனாம்சம் தரப்படவேண்டும் என்ற பிரபல ஷாபனோ வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறியது. அது ஷரீஅத் சட்டத்துக்கு விரோதமானது என்ற முஸ்லீம் லீக் பாணி முஸ்லீம் கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ், நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய சட்டம் இயற்றியது. அதிலிருந்து தான் காங்கிரஸ் லீக் போல மாறாத் தொடங்கியது. பிறகு ஹிந்துக்களின் நியாயமான ராமர் கோவில் கோரிக்கையை முஸ்லீம் லீக் மனோபாவத்தில் எதிர்த்த காங்கிரஸ் இன்னும் முஸ்லீம் லீக் போல ஆகியது. நாட்டுக்கும், காங்கிரசுக்கும் இந்த மாற்றம் மிகவும் துரதிர்ஷ்டமானது
கம்யூனிஸ்டு ஆன காங்கிரஸ்
1969-ல் காமராஜ், மொரார்ஜி, நிஜலிங்கப்பா போன்ற அப்பழுக்கற்ற நாணயமான காங்கிரஸ் தலைவர்கள் சோசியலிசத்துக்கு எதிரானவர்கள், முதலாளிகள் செல்வாக்கில் இருக்கும் அவர்கள் வங்கிகளை தேசியமயமாக்குவதை எதிர்க்கிறார்கள் என்று அபாண்டம் கூறி காங்கிரஸை இந்திரா உடைத்தது இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கில் இயங்கி காங்கிரஸில் ஊடுருவிய கம்யூனிஸ்டுகள் ஆலோசனைப்படி தான் அன்று இந்திரா அரசாங்கத்தை நடந்தி வந்தார் என்பதும் இன்றைய வாசகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த வழியில் சென்று தான் இந்திரா 1971-ல் எந்த தொழிலையும், யாருடைய சொத்தையும் நியாயமான நஷ்ட ஈடு தராமல் அரசாங்கம் பறிக்கலாம் என்ற கம்யூனிஸ்டு தத்துவப்படி அரசியல் சாசனத்தை திருத்தினார். அதன் படி நாட்டின் வளங்களை தேசியமயமாக்கி எல்லோருக்கும் பகிர்வது அரசாங்கத்தின் உரிமையும் கடமையும் ஆகியது. அந்த சித்தாந்தபடி வங்கிகள், நிலக்கரி சுரங்கங்கள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் தேசியமயமாக்கப்பட்டன. எங்கும் அரசாங்கம் எதிலும் அரசாங்கம் என்ற கம்யூனிஸ்டு கொள்கையை நடைமுறைப்படுத்திய காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சியின் மறு உருவமாக மாறியது.
சுதந்திரத்துக்கு முன் எந்த கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்தததோ, அதற்குப் பிறகு எந்த காங்கிரஸ் தெலுங்கானாவிலும். கேரளாவிலும் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளை படுகொலை செய்து கம்யூனிஸ்டு கட்சியை ஒடுக்கியதோ 1970களில், அதே கம்யூனிஸ்டு கட்சி போல மாறியது அது. அதை எதிர்த்த காமராஜ் உள்பட ஏழைகள் போல வாழ்ந்த தேசியவாதிகளை அமெரிக்க ஏஜெண்டுகள் என்று கூட சாடினார் இந்திரா. 1990-ல் சோவியத் ரஷ்யா வீழ்ச்சியடைய நரசிம்மராவ்-மன்மோகன் சிங் சோசியலிசத்தை குப்பையில் போட்டுவிட்டு மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளை நாடவேண்டிவந்தது. அதன் பிறகு சோசியலிச பொருளாதார வக்கிரங்களை சீர்திருத்தும் பொருளாதாரமுறையை வாஜ்பாய், பிறகு மன்மோகன், இன்று மோடி அரசு அவரவர்கள் முறையில் கடைபிடித்துவருகிறார்கள். தேசிய மயமாக்கல் சித்தாந்தம், தனியார் மயமாக்கல் கொள்கையாக மாறியது. திடீரென்று இந்த தேர்தல் அறிக்கையில் தேசிய வளங்களை ஆய்வு செய்து அனைவர்க்கும் அதை பகிர்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறியிருப்பது தாராளமயமாக்களிலிருந்து யுடர்ன் ஆகி, 1971-ல் கம்யூனிஸ்டாக மாறிய காங்கிரஸின் சாயல் இன்றைய ராஹுல் தலைமை காங்கிரஸுக்கு வந்திருக்கிறது. இதுவும் துரதிர்ஷடமான மாற்றம்.
ஜாதி கட்சி ஆன காங்கிரஸ்
காங்கிரஸின் மாற்றம் இத்துடன் நிற்கவில்லை. 1989-ல் ஜாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்டு விபி சிங் தலைமையில் மண்டல் இயக்கம் தொடங்கியபோது பிரதமராக இருந்த ராஹுல் தந்தை ராஜிவ் “நாட்டை ஜாதிவாரியாக பிரிக்காதீர்கள்” என்று கெஞ்சினார். போஃபோர்ஸ் ஊழலில் சிக்கிய அவர் தோல்வியுற்று விபி சிங் வெற்றிபெற, வடமாநிலங்களில் ஓபிசி கட்சிகளுக்கு மவுசு ஏற்பட காங்கிரஸ் நலியத் தொடங்கியது. மறுபக்கம் ராமர் கோவில் இயக்கத்தால் ஹிந்துக்களின் ஆதரவு குறைய, காங்கிரஸுக்கு இருபக்கமும் சரிவு. ராமர் கோவில் இயக்கத்தில் ஹிந்துக்கள் ஆதரவை இழந்து, மண்டல் இயக்கத்தால் ஒபிசிக்கள் ஆதரவை இழந்த காங்கிரஸ் காங்கிரஸ் எப்படியாவது முஸ்லீம் ஆதரவைப் பெறவேண்டும் என்று தேசியவளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதன்மை என்று முஸ்லீம் லீக்கைப் போல பேச ஆரம்பித்தது. அதில் பயனும் பெற்று 2004-ல் ஆட்சியைப் பிடித்து 10 ஆண்டுகள் ஆட்சியைம் செய்தது காங்கிரஸ். ஆனால் ஊழலாலும், முஸ்லீம் தாஜா அரசியலாலும் பாஜக அலை எழ, 2014-ல் மோடி பெரும் வெற்றி பெற்றார். 2019 தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைய இந்த தேர்தலிலும் தீவிர முஸ்லீம் தாஜா அரசியல் தவிர, எப்படியாவது இழந்த ஓபிசி வாக்குகளை மீண்டும் பெறவேண்டும் என்று ஜாதிவாரி கணக்கெடுப்பு, அதற்குத் தகுந்தபடி வாய்ப்புகள் என்று பேசத் தொடங்கியிருக்கிறது. இதுவும் அன்றைய காங்கிரஸின், குறிப்பாக ராஜிவ் தலைமை காங்கிரஸின் பாதையிலிருந்து விலகிய துரதிர்ஷமான மாற்றம்.
காங்கிரஸ் ஆன பாஜக
முஸ்லீம் லீக் போலவும், கம்யூனிஸ்டு போலவும், மண்டல் கட்சிகள் போலவும் மாறிய காங்கிரஸ் தேசிய பாணி அரசியலிலிருந்து விலக விலக அந்த இடத்தை பாஜக நிரப்ப ஆரம்பித்தது. 1949-ல் ராமஜென்ம பூமி மீட்பு இயக்கத்தை தொடங்கியவர் ராகவ தாஸ் என்ற அயோத்யா காங்கிரஸ் எம்.எல்.ஏ. காந்தியவாதியான அவரை மகாத்மா காந்தி “பாபா” ராகவ தாஸ் என்று மரியாதையாக அழைப்பார். நேருவின் தலையீட்டால் ராமர் கோவில் மீட்பை காங்கிரஸ் கைவிட, முழு தயாரிப்புடன் அதில் நுழைந்தது பாஜக. காந்தி போற்றி காங்கிரஸ் மறந்த ராமராஜ்யத்தை ராமர் கோவில் இயக்கத்தில் இணைத்தது பாஜக. காங்கிரஸ் கைவிட்ட வந்தேமாதரம், பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷங்களை உரக்க எழுப்பியது பாஜக. இப்படி சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸின் சின்னங்களான ராமர் கோவில், ராமராஜ்யம், வந்தேமாதரம், பாரதமாதா கி ஜெய் அனைத்தையும், வாக்குவங்கி அரசியல் காரணமாக மதசார்புள்ளது என்று காங்கிரஸ் விலக்க அதை எல்லாம் தேசிய சின்னங்களாக போற்றியது பாஜக. இப்படித் தான் சுதந்திரத்துக்கு முன் போன்ற காங்கிரஸாகியது பாஜக. அன்றைய காங்கிரசை எப்படி முஸ்லீம் லீக் ஹிந்து கட்சி, முஸ்லீம் எதிர்ப்பு கட்சி என்று முஸ்லிம் லீக் சாடியதோ, அப்படி இன்றைய காங்கிரஸ் பாஜகவை சாடுகிறது. எவ்வளவு வக்கிரமான மாறுதல்?
காங்கிரஸ் ஃபுல் டாஸ், மோடி சிக்ஸர்
அதனால் தான் சுலபமாக மோடி இன்றைய காங்கிரஸை முஸ்லீம் லீக் என்று வர்ணிக்க முடிகிறது. காங்கிரஸின் முஸ்லீம் தாஜா, ஜாதி, கம்யூனிஸ்டு அரசியல் பற்றி ராஹுல், சாம் பிட்ரோடா, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போடும் ஃபுல் டாஸ் களை மோடி சிக்ஸர் சிக்ஸராக அடிக்கிறார். அவர்கள் தேசிய வளங்களை மக்களுக்கு பகிர்வோம் என்று கூறினால், நீங்கள் கூறியபடி முஸ்லிம்களுக்கு முதன்மை பங்கா என்று கேட்டு சிக்ஸர் அடிக்கிறார் மோடி. ஹிந்து ராஜாக்கள் மக்கள் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்று கூறினால் முஸ்லீம் சுல்தான்களை பற்றி பேச அச்சமா என்று கேட்டு சிக்சர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் ஒபிசிக்கள் இட ஒதுக்கீட்டை பறிப்பீர்களா என்று கேட்டு சிக்ஸர். இங்கு எல்லா ஃபுல் டாஸ் களையும், சிக்ஸர்களையும் பட்டியலிடவில்லை.
அனல் பறக்கும் இந்த தேர்தல் விவாதத்தில் பிரதமர் மோடி, ராஹுல் உள்பட இருதரப்பிலும் சுய கட்டுப்பாடு இல்லாத போக்கு வெளிப்பட்டிருக்கிறது. வரம்பு மீறிய பேச்சு பற்றி புகார்கள் எழ, இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் முடியும்வரை இரு தரப்பும் சுய கட்டுப்பாட்டுடன் பிரச்சாரம் செய்யவேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
Note to the Reader: This article originally appeared in Thuglak Tamil Weekly Magazine www.gurumurthy.net. It has been reproduced in Asianet News Network.