congress condemns modi in pak issue

பிரதமர் மோடி கையில் அணிந்திருக்கும் வளையல்களை கழற்றிவிட்டு, பாகிஸ்தான் ராணுவத்தால், இந்திய வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு, தலை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய ராணுவர் வீரர் நயிப் சுபேதார் பரம்ஜித் சிங், பி.எஸ்.எப். கான்ஸ்ட்டபிள் பிரேம் சாகர் என்பவரையும் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவத்தினர், அவர்களின் தலையை வெட்டி எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரிய விரிசலை உண்டாக்கி இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்க மத்தியஅரசை அனைத்துக் கட்சிகளும் கோரியுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்தியஅமைச்சருமான கபில் சிபல் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒருவர், 2013ம்ஆண்டு இந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், பேசும்போது, பாகிஸ்தான் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு செயல்படாமல் இருக்கிறது தேவைப்பட்டால், எங்களது வளையங்களை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கட்டுமா என்றார். அந்த பெண் எம்.பி.தான் இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். அவர் வேறுயாரு மல்ல ஸ்மிருதி இராணி.

இப்போது நாங்கள் கேட்கிறோம். என்ன மாதிரியான அரசு மத்தியில் ஆள்கிறது. என்ன மாதிரியான பிரதமர் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார். இவர்கள் ஆட்சியில் பாகிஸ்தானை எந்த வழியிலும் பணிய வைக்க முடியவில்லையே. பதான்கோட் வரைக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. வந்துவிட்டது.

ஆனால், நமது பிரதமர் மோடியோ , பாகிஸ்தான் சென்று யாரோ ஒருவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறார். பாகிஸ்தான் இந்தியாவுக்காக ஒன்றுமே செய்யவில்லை, வெறுக்கும் செயலைமட்டுமே செய்துள்ளது.

பிரதமர் மோடி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானிடம் எந்தவிதமான எதிர்பார்்ப்பும் இல்லாவிட்டால், நீங்கள் அவர்களை ஆரத் தழுவிக் கொள்ளவும் தேவையில்லை, கொண்டாடவும் தேவையில்லை. பிறந்தநாளிலும் பங்கேற்கவும் வேண்டாம்.

கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியும், தீவிரவாத தாக்குதல்களும், நக்சலைட்டுகள் தாக்குதல்களும் நடக்கின்றன. பா.ஜனதா கட்சியினருக்கு தேர்தல் பிரசாரத்தை தவிர்த்து வேறு ஏதாவது நேரம் கிடைத்தால், நமது எல்லையை பாதுகாப்பது குறித்து சிறிது யோசியுங்கள், முயற்சி செய்து நடவடிக்கை எடுங்கள்.

 அதற்கு பிரதமர் மோடி,முதலில் தன்னுடைய கையில் இருக்கும் வளையல்களை கழற்றி வைத்துவிட்டு, என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.