பிரதமர் நரேந்திர மோடி, சட்டத்தைப் பின்பற்றி ரூ.2 ஆயிரம் நோட்டை வெளியிடவில்லை. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும், வெளியேயும் எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் மோடி ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த முடிவு பொதுமக்களை கடுமையாகப் பாதித்துள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி நடவடிக்கை இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது குறித்து மாநிலங்கள் அவையின் காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் நேற்று கூறியதாவது-
சட்டவிரோதமானது
பிரதமர் மோடி நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததில் சட்டவிதிகள் பின்பற்றவில்லை. புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு வெளியிட்டது சட்டவிரோதமானது. ரிசர்வ்வங்கி சட்டத்தின்படி, புதிய ரூபாய் வெளியிட்டதற்கான அறிவிப்பானை வெளியிடுவது அவசியம். ஆனால், அதைப் பின்பற்றி புதிய ரூ.2 ஆயிரம் வெளியிட வில்லை.
சர்வாதிகாரம்
பிரதமர் மோடி நாட்டை நிதி அராஜகத்துக்குள் மூழ்கடித்துவிட்டார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு மக்கள் கை விரலில் அழியாத மை வைக்கப்படுகிறது. சர்வாதிகாரிகளின் ஆட்சியில் கூட இது போல் செய்யப்படவில்லை. ஆனால், இந்த பாரதிய ஜனதா அரசில் செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத்தில்
நம்முடைய குடிமக்களும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வங்கி, ஏ.டி.எம்.களில் இருந்து செலவுக்கு பணம் எடுக்க பெரும் சிரமப்படுகிறார்கள். இது வெட்கமும், கவலையும் படக்கூடிய விஷயமாகும். ஒருநாள் இரவில் இந்தியாவின் மீது அழியாத கறை படிந்துவிட்டது. இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.
ஏமாற்றுகிறார்
முக்கியமான விஷயங்களில் பிரதமர் மோடி மக்களை திசை திருப்புகிறார். தேசியவாதம் என்ற போர்வையில் கீழ் பிரதமர் மோடி புகுந்துகொண்டு, கருப்பு பணத்துக்கு எதிராக சிலுவைப்போர் நடத்துவதாக அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்.

அவசரநிலை
நாட்டை நிதி அராஜகத்துக்குள் மூழ்கடித்ததற்கு முழுமையாக பிரதமர் மோடிதான் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் 360 பிரிவை பயன்படுத்தாமல், அறிவிக்கப்படாத நிதி அவசரநிலையை மோடி உண்டாக்கி இருக்கிறார்.
கருப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்று கூறிவிட்டு, ரூ.2 ஆயிரம் நோட்டை புழக்கத்துக்குள் கொண்டு வந்த செயல் முரண்பட்டதாக இருக்கிறது.
பாதிப்பு
மக்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.500, ரூ1000 நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் இன்னும் தயாராகவில்லை. இதனால், மக்கள் மிகுந்த சவுகரியக் குறைவுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக ஏழைகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் கொண்ட 33 கோடி பேர் கொண்ட அமைப்பு சாரா பிரிவு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
விதிமுறைகளை பின்பற்றும் நாடு என்ற பெயர் பெற்ற நமது நாட்டை இந்த அறிவிப்பு மூலம், சர்வதேச அளவில் பிரதமர் மோடி கலங்கப்படுத்திவிட்டார்.
கூட்டுக்குழு
ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கசிந்தது தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
