கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் அரசியல் கொலைகளால் பலியான 21 மார்க்சிஸ்ட் தொண்டர்களின் குடும்பத்தினர், ஆளுநர் மாளிகை முன் நேற்று அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் நடந்த அரசியல் கொலைகளில் பலியான மார்க்சிஸ்ட் தொண்டர்களின் மனைவிகள், குடும்ப உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 திருவனந்புரம் அருகே புரத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஸ் கடந்த 30ந்தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று அங்கு சென்றார்.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வீட்டுக்கு செல்வதைப் போல் மார்க்சிஸ்ட் தொண்டர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து மத்திய அமைச்சர் ஜெட்லி ஆறுதல் தெரிவிக்க வேண்டும், தங்கள் குறைகளை கேட்டு களைய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்ட செயலாளர் ஆணவூர் நாகப்பன் கூறுகையில், “ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று பொய்யான பிரசாரத்தை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா அமைப்பினர் பரப்பி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ராஜேஷ் கொலையை நினைத்து நாங்கள் உண்மையில் வருத்தப்படுகிறோம்.

அரசியல் கொலையால் பலியான மார்க்சிஸ்ட் தொண்டர்களின் குடும்பத்தினரையும் ஜெட்லி சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு எடுக்க வேண்டாம் எனக் கோரி, ஜெட்லிக்கு கடிதமும் எழுதி இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கண்ணூர், எரன்ஹோலி பஞ்சாயத்து தலைவர் ஏ.கே. ரம்யா , ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தனது கணவர் மீது நடத்திய தாக்குதாலில் ஒரு மாதமாக தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்’’ என்று தெரிவித்துள்ளார். 

ஆனால், கேரளா வந்த மத்திய அமைச்ச ஜெட்லி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரையும் சந்தித்துவிட்டு சென்றார்.