தரைப்படை, விமான மற்றும் கடற்படையில் உள்ள கமாண்டோ வீரர்களுக்கு நவீன ஆயுதங்களை வழங்கும் வகையில், புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச அளவில், இந்திய ராணுவம், 4வது இடத்தில் உள்ளது. ஆனால், நவீன ஆயுதங்கள் பயன்படுத்துவதில் சற்றே பின்தங்கியுள்ளது. ஆண்டுகள் கடந்தாலும், ராணுவத்தினருக்கு நவீன ஆயுத தளவாடங்களை வாங்குவதில் மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது நவீன ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் மட்டுமே பெயரளவுக்கு வாங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையில் 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு திட்டமிட்டது. இதன்படி, ஆட்சி முடிவடைய இன்னும் ஓராண்டு எஞ்சியுள்ள சூழலில், தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் ராணுவ வீரர்களுக்கு நவீன ஆயுதங்களை கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் அந்நாடுகளுக்கு பீதியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முடிவில் நவீன ஆயுதங்கள் வாங்க நிர்மலா அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

தரைப்படை, விமான மற்றும் கடற்படையில் கமாண்டே வீரர்கள் பிரிவு உள்ளது. ஆபத்து காலங்களில் அதிரடியாக செயல்பட்டு எதிரிகளை நிலைகுலையச் செய்வது இவர்களின் சிறப்பம்சம் ஆகும். இவர்களுக்கு தான் நவீன ஆயுதங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஃபின்லாந்து, ஸ்வீடன், இத்தாலி, ரஷ்யா, இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து இதற்கான ஆயுதங்கள் வாங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில், தொலைவில் இருந்து குறிபார்த்து சுட உதவும் ஸ்னைப்பர் ரைஃபிள்ஸ், ஆட்களை ஏற்றிச் செல்லும் டாங்கிகள், டாங்கிகளை எதிர்த்து சண்டையிடும் பீரங்கிகள், இலகு ரக ராக்கெட் லாஞ்சர்கள், நீருக்கடியில் வேகமாக பயணிக்க உதவும் ஸ்கூட்டர்கள், மிகவும் சிறிய ட்ரோன்கள் (ஆளில்லா சிறு ரக விமானங்கள்) உள்ளிட்டவை அடங்கும். 

இதுபற்றி ராணுவத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஒப்பந்தங்களை விரைவில் இறுதி செய்ய திட்டமிட்டுள்ளோம். ஃபின்லாந்து, ஸ்வீடன், இத்தாலி, இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தரைப்படையில் உள்ள சிறப்பு வீரர்கள் பிரிவு, விமான மற்றும் கடற்படையினருக்குத் தேவையான ஆயுதங்களுக்கு இதில் முக்கியத்துவம் தரப்படும். குறிப்பாக, காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபடும் பாரா கமாண்டோ துருப்புகளுக்கு உதவும் வகையில், நவீன ஆயுதங்கள் வாங்க உள்ளோம்,’’ என தெரிவித்தனர். 

இதன்மூலமாக, எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 620 கமான்டோ வீரர்கள், விமானப் படையில் உள்ள 900 கமான்டோ வீரர்கள், கடற்படையில் உள்ள 1000 கமான்டோ வீரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், ராணுவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஆயுதக் கொள்முதலை வெற்றிகரமாக நிறைவு செய்தால் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் செய்யும் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.