கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து புதிய 2000 நோட்டுகள் வெளியானது. ஆனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு தினமும் வங்கியின் வாசலில், ஏராளமான பொதுமக்கள் காத்துக்கிடப்பது வாடிக்கையாக உள்ளது.

மேலும், ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு ஏராளமான கட்டுப்பாடுக்களும் விதிக்கப்பட்டன. அவை 2000த்தில் தொடங்கி, 2500, 4500 தற்போது 10,000 வரை எடுக்கலாம் என அறிவித்தது. ஆனால், பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளன. ஒரு சில ஏடிஎம் மையங்கள் மட்டும் திறந்துள்ளன. ஆனால், அதிலும் சரிவர பணம் கிடைக்கவில்லை.

குறிப்பாக ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தாலும், அதில் வரும் 2000 ரூபாய் நோட்டை சில்லறையாக மாற்ற பல இடங்களுக்கு அலையும் அவல நிலை இன்றும் நீடித்தே வருகிறது. மக்களின் குறைகளை தீர்க்க 500, 100, 50 ஆகிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகள், புதிய வடிவில் விரைவில் வெளியிடப்படும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 2016ம் நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2000 ரூபாய் நோட்டுகள் வெளியானது. ஆனால், இந்த பணத்தை சில்லறையாக மாற்ற மக்கள் கடும் அவதியடைவதாகவும், சில்லறை புழக்கத்தை ஏற்படுத்தவும் கோரிக்கைகள் வந்தன.

இதனால், 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து படிப்படியாக நீக்குவது குறித்து ஆராயப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வண்ணத்தில், மாற்றத்துடன் வடிவமைப்புடன், 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, பார்வையற்ற மாற்று திறானளிகளும் அறிந்து கொள்ளும்வகையில் இருக்கும். தற்போது, இதற்கான பணி நடந்து வருகிறது.

மேலும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கி கொள்வது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றனர்.