Coming soon plastic Rs.10 note - given the green light to the central Reserve Bank

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியிருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒரு கோடி பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, குறிப்பிட்ட சில நகரங்களில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாக நாடளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “நாட்டின் 5 பகுதிகளில் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடித்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்யவும், பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 10 ரூபாய் நோட்டுகளைவிட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் நீடித்து இருக்கக் கூடியவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.