நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் மின் இணைப்பும், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதிக்கு முன்பாக நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ்கோயல் நேற்று பேசியதாவது-

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2022ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ந் தேதிக்குமுன்பாக, மின் இணைப்பு வழங்க மத்திய அரசுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேபோல, அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு அடுத்த ஆண்டு மேமாதத்துக்குள் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை மத்திய அரசு திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே முடித்துவிடும் என்று இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

‘டிஸ்காம்’ திட்டத்தில் கடந்த 2012-13ம் ஆண்டு ஒட்டுமொத்த இழப்பு ரூ.2.லட்சத்து 53 ஆயிரத்து 700 கோடியாக இருந்த நிலையில், அது 2014-15ம் ஆண்டில் ரூ.3.60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2014-15ம் ஆண்டில் இது ரூ.4.லட்சம் கோடியாக அதிகரித்தது.

மாநில அரசுகளின் தொடர் பங்களிப்பு மூலம் விரைவில் இந்த இழப்புகள் சரியாகும் என நம்புகிறேன். கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உதய் மின் திட்டத்தின் மூலம், மாநிலங்கள் படிப்படியாக இணைந்து வருகின்றன. இதனால், மாநிலங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட இழப்பு கடந்த 2015, 2016ம் ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாக தெரிய வருகிறது.

அதேபோல மின் உற்பத்தியும் 99,209. மெகாவட்டாக அதிகரித்துள்ளது. அதேசமயம்,டிஸ்காம் திட்டத்தின் மூலம் ஏற்படும் இழப்புக்கும், கடனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஒட்டுமொத்த கடனும், இழப்பும் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதற்கு திட்டங்களின் பற்றாக்குறை, மாநிலங்களின் பங்களிப்பு இன்மை, டிஸ்காம் திட்டத்தை போதுமான அளவில் செயல்படுத்தாதது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் என்று சுமித்ரா மகாஜன் புகழாரம்

மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல், அவரின் துறையில் இருக்கும் ஆழ்ந்த அறிவுக்கு அவரை பேராசிரியர் என்று அழைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் புகழாரம் சூட்டினார்.

கேள்விநேரத்தின் போது பேசிய அமைச்சர் பியூஸ் கோயல் தனது துறையைப் பற்றி நீண்டநேரம் பேசினார். கிராமங்களில் செயல்படுத்தப்படும் மின் திட்டங்கள், மின் திட்டங்களை செயல்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேசினார். இதைக் கேட்ட அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன், ‘ பியூஸ் கோயல் என்ற பெயரை மாற்றி, பேராசிரியர் பியூஸ் கோயல் என அழைக்க வேண்டும் என்றார்.