கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் யெல்லாபூரில் உள்ளது அனகொடு சேவா சஹாகரி சங்கம். கூட்டுறவுச் சங்கமான இதன் சார்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டார் அதன் தலைவர் NK.பட்.. அதில், அந்த கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயியைத் திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டமானது வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கவுள்ளது. விவசாயிகளுக்குத் திருமணம் செய்ய முடியாமல் கஷ்டப்படும் அவர்களது குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்தவும், இளம் விவசாயிகளுக்கு எளிதில் வாழ்க்கைத் துணை அமையவும் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறியுள்ளார் NK.பட்  அரசு வேலை, ஐடி வேலையில் இருக்கும்  பசங்களுக்கே இன்றைய பெண்கள் முக்கியத்துவம் தருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டுறவு சங்கத்தில் மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் உறுப்பினராக இருக்க வேண்டும். அவரது ஆண்டு பண மாற்று சுமார் ரூ.3 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பது இதற்கான நிபந்தனை. அனகொடுவில் 300 வீடுகள் உள்ளன. பெரும்பாலானோர் இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். 

தங்கள் விவசாயி மகனுக்குப் பெண் தேடும் பெற்றோர்கள் கூட, தங்கள் பெண்ணுக்கு விவசாயம் செய்யும் பையனுக்கு கணவர் ஆக்க விரும்பவில்லை எனக்  குறிப்பிட்டுள்ளார்.