கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை அதிருப்தி எம்எல்ஏக்கள் 20 பேர் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடகா அரசியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
    
கர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடந்ம சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெருபான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. தற்போது மஜதவை  சேர்ந்த குமாரசாமி முதல்வராக உள்ளார். காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர்  துணை முதல்வராக இருந்து வருகின்றனர்.   

எனினும் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க 2-வது முறையாக தற்போது தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வற்புறுத்தலின் பேரில், கடந்த மாதம் அமைச்சரவை விரிவாக்கம்  செய்யப்பட்ட போது அமைச்சர்களாக இருந்த இருவரை நீக்கிவிட்டு, ஒட்டு மொத்தமாக 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதனால் காங்கிரஸ்  கட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் பிசி பட்டீல், பீமா நாயக், அமைச்சர் பதவியை பறிகொடுத்தவர்கள் உள்பட 18 முதல் 20-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சிக்கு எதிராக செயல்பட தொடங்கி உள்ளனர். 

பொங்கல் பண்டிகை்கு பின் அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணை திட்டுமிட்டுள்ளனர். ஆனால் 20 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கணேஷ் ஹூக்கேரி தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக போவதில்லை என்று தெரிவித்தார்.  தற்போது முதல் கட்டமாக 8க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள்  டெல்லியில் ரகசிய  இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் பொங்கலுக்கு  பின் ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் 104 பேரை ஊர் திரும்ப வேண்டாம் எனவும், அனைவரும் டெல்லியில் தங்கியிருக்க வேண்டும் என எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.