87 வயது மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கிய முதல்வர்...!
ஆந்திராவில் புதிய தலைநகரம் உருவாக்க நிதி வழங்கிய மூதாட்டியின் காலைத் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொட்டு வணங்கினார்.
ஆந்திராவில் புதிய தலைநகரம் உருவாக்க நிதி வழங்கிய மூதாட்டியின் காலைத் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொட்டு வணங்கினார்.
ஆந்திர மாநிலம், அனந்தபூரில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, கதிரியில் செர்லோபள்ளி அணைக்கட்டிலிருந்து கிருஷ்ணா நதி நீரை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட விழா மேடையில் 87 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வந்தார். அப்போது சந்திரபாபு நாயுடுவிடம் ரூ.50,000 கொடுத்தார்.
இதனை பெற்றுக் கொண்ட முதல்வர் 'இந்த பணம் எதற்கு?' என கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி ’மாநிலத் தலைநகர் அமராவதியை உருவாக்க முதியோர் ஓய்வூதியத் தொகை பணம் மற்றும் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த தொகையான ரூ. 50,000 பணத்தை முதல்வர் நிதிக்காக அளிக்க முன் வந்துள்ளேன்’ என கூறினார்.
இதனை கேட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு திகைத்து போனார். யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அந்த மூதாட்டியின் காலில் விழுந்து தன்னை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் வியப்படைய செய்தது. மேலும் அவரது சமூகப் பொறுப்புணர்வை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். இவரை பார்த்து மக்கள் அமராவதிக்கு சுயமாக நிதி உதவி செய்ய முன்வர வேண்டுமென சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.