China would not interfere in the affairs of the Indian Minister of State for the Home kiranrijiju warning

இந்திய விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று சீனாவை மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநிம் திபெத்தின் ஒரு பகுதி என்று கூறி அதற்கு சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்னை நிலவி வருகிறது.

இந்நிலையில் திபெத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட புத்த துறவி தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு இந்தியா ஆதரவு அளிப்பதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தலாய்லாமாவின் அருணாச்சல பயணம் குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், தலாய் லாமாவை அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல அனுமதிப்பது என்பது இரு தரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தும் என எச்சரிக்கை செய்திருந்தது.

இந்த நிலையில், சீனாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஆன்மிக பணிக்காகத்தான் அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமா சென்றுள்ளார். இதற்கு எந்தவொரு அரசியலும் பின்னணியில் இல்லை. அருணாச்சல பிரதேசம் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். அங்கு தலாய் லாமா செல்வதை சீனா எதிர்க்க முடியாது.

அதே நேரத்தில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடக் கூடாது. அந்நாட்டின் விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிட்டது இல்லை.

இந்தியா – சீனா எல்லை குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. ஆனால் அருணாச்சல பிரதேசத்தை சீனா ஒருபோதும் சொந்தம் கொண்டாட முடியாது.

இரு நாட்டு எல்லை பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலமாக விரைவில் தீர்க்கப்படும் என அருணாச்சல பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதன் அடிப்படையில் எந்தவொரு சமூகத்தின் மத விவகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ள புத்த மத துறவி தலாய் லாமா, கிரன் ரிஜிஜுவின் சொந்த ஊரான கமேங் மாவட்த்திற்கு செல்லவுள்ளார்.

அங்கு புத்த மடம் ஒன்றை அவர் திறந்து வைக்கவுள்ளார். கடைசியாக அவர் கடந்த 2009-ல் அருணாச்சல பிரதேசம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.